பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்த 11 கட்சிகள் ஆதரவு! இனி தேர்வு நடக்குமா? நடக்காதா?
By Aruvi | Galatta | Jun 05, 2021, 03:02 pm
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு நடத்துவதற்கு அதிமுக உள்பட 11 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதால், பிளஸ் 2 தேர்வை நடத்துவது குறித்து இனி தமிழக அரசு தான், முடிவு எடுக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் சிபிஎஸ்இ பொது தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.
அத்துடன், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று கடந்த வாரம் வரை குறையாத நிலையில், “சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக” பிரதமர் மோடி கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், மத்திய அமைச்சர்களான அமித்ஷா, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, “சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக” பிரதமர் மோடி அறிவித்தார்.
அத்துடன், “கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக” பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, “தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மகேஷ் பொய்யாமொழி, ஆலோசனை நடத்தினார். பின்னர், முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
அதன் தொடர்ச்சியாக, பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில், 60 சதவீதம் பெற்றோர்கள் மற்றும் பெரும்பாலான கல்வியாளர்கள் 12 ஆம் வகுப்பு பொது தேர்வை நடத்த ஆதரவு தெரிவித்தனர்.
இதனையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கருத்தை கேட்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அதன் தொடர்ச்சியாக சட்டசபை கட்சி பிரதிநிதிகளுடன் காணொலி மூலமாக ஆலோசனை நடத்தினர். இதில், 13 கட்சியை சேர்ந்த சட்டமன்ற பிரதிநிதிகளுடன் இன்று காணொலி மூலமாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், பாலாஜி, செல்வப்பெருந்தகை, சதன் திருமலைக்குமார், ஜவாஹிருல்லா, ஜி.கே மணி உள்ளிட்ட 13 கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதே போல், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், தேர்வுகள் துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், “பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு நடத்த திமுக எம்எல்ஏ கோவி.செழியன் ஆதரவு தெரிவித்தார்.
அதே போல், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. விரும்பும் மாணவர்களுக்குத் தேர்வு எழுதிக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என கொங்கு மக்கள் தேசிய கட்சி கோரிக்கையை முன்வைத்தது.
குறிப்பாக, அதிமுக நடுநிலை வகிக்கும் நிலையில், 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்த ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த கூட்டத்தில் பாஜக சார்பில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்தார். அவரைப் போலவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்ப்புத் தெரிவித்தது.
இப்படியாக, பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர திமுக, அதிமுக உள்ளிட்ட பிற அனைத்துக் கட்சிகளும் 12 ஆம் வகுப்பு தேர்வு நடத்த ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளன. இதனால், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த 13 கட்சிகளில், 11 கட்சிகள் 12 ஆம் வகுப்பு தேர்வை நடத்த ஆதரவு தெரிவித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, “12 ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்பட்டால், செய்யப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும்” செய்திகள் வெளியாகி உள்ளன.
இதனால், தமிழகத்தில் இனி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்து, தமிழக அரசு தான், முடிவு எடுக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகலாம் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வுசெய்ய நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.