10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 3 வது வாரத்தில் நடத்த முடிவு!
By Aruvi | Galatta | May 05, 2020, 09:44 am
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 3 வது வாரத்தில் நடத்த நடத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தமிழகம் உட்பட ஒட்டுமொத்த நாட்டின் இயல்பு நிலையில் அப்படியே முடங்கி உள்ளது.
இதனால், கடந்த மார்ச் 27 ஆம் தேதி தொடங்க இருந்த 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் ஏப்ரல் 15 ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது வரை கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. இதனால், தற்போது தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழக சுகாதாரத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26 ஆம் தேதி நடைபெறவேண்டிய தேர்வு, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.
அதேபோல், கடந்த மார்ச் 24 ஆம் தேதி நடந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு, வேறொரு தேதியில் தேர்வு நடைபெறும் என்றும், முதலமைச்சர் பழனிசாமி கூறியிருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழலில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்பொழுது நடைபெறும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுதல் தற்போதுவரை கட்டுக்குள் வரவில்லை. இதனால், மே 17 ஆம் தேதிக்குப் பிறகும், தமிழகத்தில் நிலவும் சூழல் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும், தேர்வுத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
குறிப்பாக, தேர்வு நடைபெறும் தேதி மற்றும் கால அட்டவணை மே மாதம் இறுதியில் வெளியிடப்பட உள்ளதாகவும், அதனைத்தொடர்ந்து ஜூன் மாதம் 3 வது வாரத்தில், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், இந்தத் தேர்வினை 10 நாட்களுக்குள் நடத்தி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அந்த அதிகாரி தெரிவித்தார்.