சென்னையில் 100 காவல்துறையினர் கொரோனாவல் பாதிப்பு!
By Aruvi | Galatta | May 12, 2020, 01:07 pm
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா பரவல் காரணமாகத் தமிழகம் உட்பட நாடு முழுவதும் வரும் 17 ஆம் தேதி வரை தொடர்ந்து 54 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பாக்கப்பட்டு வருகிறது.
இதனால், கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து விதமான போக்குவரத்துக்கும் தடை விதித்த தமிழக அரசு, பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், தேவை ஏற்பட்டால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
இது தொடர்பாகத் தமிழகம் முழுவதும் போலீசார், பாதுகாப்புப் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.
இதனிடையே, கடந்த வாரம் சென்னை மாநகர காவல்துறையின் துணை ஆணையர், மற்றொரு துணை ஆணையரின் ஓட்டுநர், 8 பயிற்சி பெண் காவலர்கள், 10 போக்கு வரத்துக் காவலர்கள் என 41 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர், அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையில் காவலர்களுக்கு கொரோனா பரவியது எப்படி என்றும் விசாரணை நடத்தப்பட்டது.
இதில், ஆலந்துரில் உள்ள காவலர் குடியிருப்பைச் சேர்ந்த ஒரு காவல் உதவி ஆய்வாளருக்கு முதன் முதலாக கொரோனா தாக்கியது தெரியவந்தது. அவர் மூலமாக மற்ற காவலர்களுக்கம் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
பின்னர், திருமுல்லைவாயில் காவல் ஆய்வாளருக்கும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, கடந்த 6 ஆம் தேதி, டி.ஜி.பி அலுவலக தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேர், சூளைமேடு உதவி ஆய்வாளர், ஆயுதப்படை காவலர்கள் 4 பேர் என 13 பேரும் பாதிக்கப்பட்டனர்.
கடந்த 7 ஆம் தேதி வரை, சென்னை வேப்பேரி தீயணைப்பு நிலையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இதனால், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்தது. து.
இந்நிலையில், ஊரடங்கின் 49 வது நாளான இன்று, சென்னையில் 2 துணை ஆணையர்கள், ஒரு உதவி ஆணையர் உள்பட 100 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் உள்ள காவல்துறை அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
இதனிடையே, கடலூரில் ஒரே நாளில் காவல் துறையைச் சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள காவல்துறையினருக்கு யார் மூலமாக கொரோனா வந்துள்ளது என்பது தெரியாததால், கடலூரில் கொரோனா சமூக தொற்றாக மாறிவிட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தற்போது, அங்குப் பாதிக்கப்பட்ட காவலர்கள், உதவி ஆய்வாளரின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.