தமிழக வீரர் கலக்குவரா? ஐபிஎல் 2021 - பஞ்சாப் அணிக்காக இன்று அறிமுகமாகிறார் தமிழக வீரர் ஷாருக்கான்!
By Aruvi | Galatta | Apr 12, 2021, 07:07 pm
பஞ்சாப் அணிக்காக இன்று அறிமுகமாக உள்ள தமிழக வீரர் ஷாருக்கான் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
14 வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த 9 ஆம் தேதி முதல் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதன் படி, ரசிகர்கள் இன்றி இந்தியாவில் கிட்டத்தட்ட 6 நகரங்களில் இந்த ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அதன் படி, இன்று நடைபெறும் போட்டியில், இது வரை வெற்றி கோப்பையையே வென்றிடாத பஞ்சாப் அணியும், ஐபிஎல் முதல் சீசனில் கோப்பையை வென்ற ராஜஸ்தான் அணியும் இன்று மோதுகின்றன.
இதில், 2 அணியிலும் வலுவான பேட்ஸ்மேன்கள் அதிகம் உள்ளனர். அதே போல், சிக்ஸ் அடித்து வானவேடிக்கை காட்ட கூடிய வீரர்கள் இரு அணியிலும் சம பலத்துடன் உள்ளனர். இதனால், இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய போட்டியில், ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக 16.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட கிறிஸ் மோரிஸ், மீது ராஜஸ்தான் அணி பெரும் நம்பிக்கையை வைத்து உள்ளது.
அதே நேரத்தில், காயம் காரணமாக ஜோப்ரா ஆர்ச்சர், இந்த தொடரின் முதல் கட்ட போட்டிகளில் விளையாடவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், வேகப்பந்து வீச்சில் முன் நின்று தாக்குதல் நடத்துவது மோரிஸுக்கு கூடுதல் பொறுப்பாக தற்போது அமைந்து உள்ளது.
கடந்த தொடரில் ஆர்ச்சருக்கு துணையாக வேறு யாருமில்லாமல் அவர் மட்டும் தனி ஆளாக ராஜஸ்தான் அணிக்கு போராடிய நிலையில், இந்த முறை மோரிஸுக்கு பக்கபலமாக முஷ்தபிஷூர் ரகுமானை அந்த அணி தேர்வு செய்துள்ளது.
அதே போல், பஞ்சாப் பந்துவீச்சு வரிசை சற்று பலமிழந்துதான் காணப்படுகிறது என்ற கருத்தும் மேலோங்கி உள்ளது. ரிலே மெரிடித், ஜை ரிச்சர்ட்சன், கிறிஸ் ஜோர்டன், மொய்சஸ் ஹென்ரிக்ஸ் என வெளி நாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தும், அனுபவம் வாய்ந்த இந்தியப் பந்து வீச்சாளர்கள் இல்லாதது தான் அந்த அணியின் மைனசாக பார்க்கப்படுகிறது.
முக்கியமாக, இன்றையப் போட்டி நடக்கும் மும்பை வான்கடே மைதானம் என்பது பேட்டிங்கிற்குச் சாதகமான ஆடுகளம் என்பதால், இது பஞ்சாப் அணிக்குக் கூடுதல் பலத்தை அளிக்கும் என்றும் கூறப்படுகிறது
பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், கிறிஸ் கெயில், மயங்க் அகர்வால், நிக்கோலஸ் பூரன், டேவிட் மாலன், மந்தீப் சிங், தமிழக அறிமுக வீரர் ஷாருக் கான் என அனைத்து வரிசைகளிலும் பஞ்சாப் அணி மிரட்டலான பேட்ஸ்மேன்களை வைத்திருக்கிறது. இதனால், ராஜஸ்தான் கூடுதல் வேகப்பந்துவீச்சாளரைச் சேர்த்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
குறிப்பாக, பஞ்சாப் அணியில் இன்று அறிமுகம் ஆக உள்ள தமிழக வீரர் ஷாருக்கான் அதிக கவனம் பெற்று உள்ளார். பஞ்சாப் அணியால் இவர் 5.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் பஞ்சாப் அணியில் இவர் பினிஷராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “சையது முஷ்டாக் அலி” தொடரில் தமிழக அணியில் மிகவும் சிறப்பாக விளையாடி கலக்கிய தமிழக வீரர் ஷாருக்கான், அந்த தொடர் முழுக்க தமிழக அணி பல போட்டிகளில் வெற்றிபெற காரணமாக அமைந்தார். கடைசிக் கட்டத்தில் வந்து சிக்ஸ், பவுண்டரி என்று அடித்து நொறுக்கி, போட்டியை மாற்றும் திறன் கொண்ட பலமான வீரராக ஷாருக்கான் பார்க்கப்படுகிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த 25 வயதான இளம் வீரர் ஷாருக்கான் குறித்து பேசியுள்ள பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, “அதிரடி பேட்ஸ்மேனான பொல்லார்டை, எனக்கு அவர் நினைவு படுத்துவதாக” தெரிவித்து உள்ளார்.
முக்கியமாக, தமிழக வீரர் ஷாருக்கானை ஏலத்தில் எடுக்கும் போது, பெங்களூர் அணியும் அவரை ஏலத்தில் எடுக்க தீவிரமாக முயன்றது. ஆனால், பஞ்சாப் அணி இவருக்கு எவ்வளவு கோடி வேண்டுமானாலும் கொடுக்க ரெடியாக இருந்தது. இதற்காகவே, தமிழக வீரர் ஷாருக்கானின் ஆட்டத்தை இந்திய கேப்டன் கோலி இன்று உன்னிப்பாக கவனிப்பார் என்றும், இதன் மூலம் ஷாருக்கான் விளையாடும் விதத்தை பொறுத்து, அவரது அவரின் கிரிக்கெட் கெரியரே புதிய வகையில் மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக, இன்றைய ஐபிஎல் போட்டியில் தமிழக வீரர் ஷாருக்கான், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.