ஐபிஎல் 2021 - வார்னர் சொதப்பலில் வீழ்ந்ததா ஐதராபாத்!? கொல்கத்தா அணியிடம் வீழ்ந்தது எப்படி?
By Aruvi | Galatta | Apr 12, 2021, 11:01 am
ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், ராணா - திரிபாதியின் அதிரடி ஆட்டத்தால், கொல்கத்தா அணி அபார வெற்றிப் பெற்றது.
14 வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த 9 ஆம் தேதி முதல் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதன் படி, ரசிகர்கள் இன்றி இந்தியாவில் கிட்டத்தட்ட 6 நகரங்களில் இந்த ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
அதில், சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு நடைபெற்ற 3 வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் அணியும் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலபரிச்சை நடத்தின.
இதில், டாஸ் ஜெயித்த ஐதராபாத் கேப்டன் வார்னர், முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி, கொல்கத்தா அணியில் நிதிஷ் ராணாவும், சுப்மான் கில்லும் தொடக்க வீரர்களாக களம் இறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின்னர், போக போக பவுண்டரிகளாக விரட்டி ஆட்டத்தை அமர்க்களப்படுத்த தொடங்கினர்.
இதில், பவர் பிளேயான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை கொல்கத்தா அணி சேர்த்தது.
இதனையடுத்து, சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் பந்து வீச்சில் சுப்மான் கில் 15 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆட்டமிழந்தார். 2 வது விக்கெட்டுக்கு இறங்கிய ராகுல் திரிபாதியும், வந்ததும் வேகம் காட்டினார். அவர் எதிர்கொண்ட பந்துகளை நாலாபுறமும் தெறிக்க விட்டு ரன்களை குவித்தார்.
அதே நேரத்தில், தனது சுழலில் ரஷித்கான் ஒரு பக்கம் ரன்ரேட்டை ஓரளவு கட்டுப்படுத்திய நிலையில், மற்ற பவுலர்களின் பந்து வீச்சை ராணா அடித்து நொறுக்கித் தள்ளினார்.
குறிப்பாக, தனது முதல் 2 ஓவர்களில் 21 ரன்களை வாரி வழங்கினார் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன்.
அத்துடன், அணியின் ஸ்கோர் 146 ரன்களாக இருந்த போது, 15.2 ஓவராக இருந்த நிலையில், 29 பந்துகளை எதிர்கொண்ட திரிபாதி, 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 53 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதே போல், சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராணா, தனது பங்குக்கு 56 பந்துகளில், 9 பவுண்டரி, 4 சிக்சர் விலாசி மொத்தம் 80 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ஆந்த்ரே ரஸ்செல் 5 ரன்னிலும், கடைசி நேரத்தில் வந்த கேப்டன் இயான் மோர்கன் 2 ரன்னிலும், ஷகிப் அல் ஹசன் 3 ரன்னிலும் அடுத்து அடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 9 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்து 22 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டு இழப்பிற்கு 187 ரன்கள் சேர்த்து இருந்தது.
பின்னர், 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான வார்னர், விருத்திமான் சஹாவும் களம் இறங்கினர். இதில், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் வீசிய முதல் ஓவரில் வழங்கிய கேட்ச் வாய்ப்பை கம்மின்ஸ் வீணடித்த நிலையில், அடுத்து வீசிய பிரசித் கிருஷ்ணாவின் பந்து வீச்சில் வார்னர் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதே போல், விருத்திமான் சஹாவும் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து, களம் இறங்கிய மனிஷ் பாண்டேவும், ஜானி பேர்ஸ்டோவும் சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி 92 ரன்கள் சேர்த்தது,
அதன் படி, பேர்ஸ்டோ 55 ரன்னிலும், பின்னர் வந்த முகமது நபி 14 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.கடைசி ஓவரில் ஐதராபாத்தின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட போது, இறுதி ஓவரை கட்டுக்கோப்புடன் வீசிய ஆந்த்ரே ரஸ்செல் 11 ரன்கள் மட்டுமே கொடுத்து, அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதனால், 20 ஓவர்களின் முடிவில் ஐதராபாத் அணியால் 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 10 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. அப்போது, மனிஷ் பாண்டே 61 ரன்களுடனும் அப்துல் சமாத் 19 ரன்னுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இதில், வார்னர் சொதப்பியதே அணியில் வீழ்ச்சிக்கு காரணம் என்று, விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.