சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி!
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட் 15-வது தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது. இன்று நடைபெற்று வரும் 38-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொண்டது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்நிலையில் பஞ்சாப் அணியில் துவக்க வீரர் ஷிகர் அதிரடி காட்டினார். ஒரு முனையில் சீராக விக்கெட்டுகள் விழுந்தாலும் ஷிகர் தவன் பொறுப்புடன் விளையாடியதால், அந்த அணியின் ரன்வேகம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. பனுகா ராஜபக்சேவும் 44 ரன்கள் ஓரளவு சிறப்பான பங்களிப்பை அளித்தார்.
அதனைத்தொடர்ந்து விளையாடிய போது பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் சேர்த்தது. ஷிகர் தவன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 59 பந்துகளில் 88 ரன்கள் அடித்தார். இதனைத்தொடர்ந்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் கெய்க்வாட் மற்றும் உத்தப்பா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் உத்தப்பா 1 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய சாண்ட்னர் 9 ரன்களும், ஷிவம் துபே 8 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் சிறப்பாக ஆடிய கெய்க்வாட் 30 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். இதனிடையே தனது அதிரடியால் ரன் ரேட்டை வேகமாக உயர்த்திக் கொண்டிருந்த அம்பத்தி ராயுடு தனது அரைசதத்தை பூர்த்தி செய்திருந்தநிலையில் 78 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய அதிரடி காட்டிய தோனி 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மேலும் இதன் முடிவில் கேப்டன் ஜடேஜா 21 ரன்களும், பிரிட்டோரியஸ் 1 ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் சென்னை அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக ரபடா மற்றும் ரிஷி தவான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.