“மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்” - ராஜீவ் சுக்லா
By Aruvi | Galatta | May 29, 2021, 02:02 pm
“14 வது ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்” என்று, பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்து உள்ளார்.
இந்தியாவில் கொரோனா என்னும் பெருந் தொற்று 2 வது அலையாக பரவிக்கொண்டு இருப்பதற்கு மத்தியில் தான், 14 ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி இந்தியாவில் நடத்தப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக, இந்த முறை போட்டி தொடங்கும் முன்பும், தொடங்கிய பின்பும் வீரர்கள் சிலரும், நடுவர்கள் சிலரும் போட்டியிலிருந்து பாதியிலேயே விலகுவதாக அறிவித்தனர்.
எனினும், இது வரை 29 லீக் போட்டிகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், கடைசியாக கொல்கத்தா - பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டமானது, 2 கொல்கத்தா வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, திடீரென்று ரத்து செய்யப்பட்டது.
அத்துடன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும், இன்னும் சில வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினருக்கு பயோ பபுல் கட்டுப்பாடுகள் கடுமையாக பின் பற்றப்பட்டு வருகின்றன.
அதே போல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இவர்களுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வீரர்களில்லாமல், நிர்வாகத்தைச் சேர்ந்த சிலருக்கும், கொரோனா பரவியதாகத் தகவல் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், ஒட்டுமொத்த சென்னை அணியும் கடுமையான தனிமைப்படுத்தும் முகாமுக்குச் சென்றன.
அதே போல், சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் சஹா மற்றும் டெல்லி அணியின் அமித்மிஸ்ராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இப்படியாக, ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடர் தற்போது அதிரடியாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கடந்த மாதம் அறிவித்தார்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் காணொலி மூலமாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தலைமை தாங்கினார்.
இதில், இந்தியாவில் நிலவும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் வருங்கால கிரிக்கெட் போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. .
பொதுக்குழுவின் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா, “14 வது ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்” என்று, தெரிவித்தார்.
இதனிடையே, 14 வது ஐபிஎல் தொடரில் இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சி உள்ளது குறிப்பிடத்தக்கது.