சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மேலும் ஒரு வீரர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளதால், அந்த அணியில் பெருசா ஏதோ பிரச்சனை இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பமான முதலே கேப்டன் மகேந்திர சிங் தோனி, சென்னை அணியில் நிரந்தர கேப்டனாகவே இருந்து வருகிறார். அதே நேரத்தில், கேப்டன் மகேந்திர சிங் தோனி தனக்கே உண்டான பாணியில், தனது அணியைத் திறம்பட வழி நடத்திச் சென்றதோடு, ஒரு வலிமை மிக்க அணியாகவே இது வரை பாதுகாத்து வந்தார். ஆனால், தற்போது சென்னை அணி வலிமை இழந்து, இந்த ஆண்டு ப்ளே ஆஃப் சுற்றுக்கூட செல்ல முடியாத நிலை தற்போது உருவாகி இருப்பதாக கூறப்படுகி-றது.

அதற்கு முக்கிய காரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகக் கடந்த 8 ஆண்டுகளாக ஜொலித்து சென்னை ரசிகர்களின் நம்பிக்கையைப் பெரிய அளவில் பெற்று இருந்த துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, அணியின் நிர்வாகத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே போட்டியிலிருந்து விலகி இந்தியா வந்து சேர்ந்தார். அதே நேரத்தில், சென்னை அணியின் நிர்வாகத்தினர் சுரேஷ் ரெய்னாவை சமாதானம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்பட்டன. 

அதே நேரத்தில், “சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா விளையாடவில்லை என்றால், அவர் 11 கோடி ரூபாயை இழப்பார் என்றும், சென்னை அணி ஒரு குடும்பம் போன்றது அதில் யாருக்குப் பிடிக்கவில்லையோ அவர்கள் வெளியேறலாம் என்றும், சென்னை அணியின் உரிமையாளரும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சீனிவாசன் தெரிவித்தார். 

ஆனால், சுரேஷ் ரெய்னாவைத் தொடர்ந்து, முக்கிய வீரரான ஹர்பஜன் சிங்கும் சென்னை அணியின் நிர்வாகத்திடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறினார்.
 
அதன் தொடர்ச்சியாக, சென்னை ரசிகர்கள் சிலர் டிவிட்டரில் “சென்னை அணியின் துணை கேப்டன் யார்?” என்று கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு சென்னை அணியின் நிர்வாகம் தரப்பில் “கேப்டன் தோனியைச் சுட்டிக்காட்டி ‘வைஸ்’ கேப்டன் இருக்கும் போது வைஸ் கேப்டன் எதற்கு?” என்று நக்கலாகப் பதில் அளித்திருந்தனர்.
 
இந்நிலையில் தான், சென்னை அணி எதிர்கொண்ட மும்பைக்கு எதிரான முதல் போட்டியில், அம்பத்தி ராயுடுவின் துணையோடு முதல் வெற்றியைப் பதிவு செய்தது. ஆனால், அதன் பிறகு களம் இறங்கிய 3 போட்டிகளிலும் ஜெயிக்க முடியாமல் திணறிப்போனது. பின்னர், மீண்டும் ஒரு வெற்றியைப் பெற்ற சென்னை அணி, மீண்டும் தோல்வியைச் சந்தித்து உள்ளது. 

முக்கியமாக, சென்னை அணி மந்தமாகவே விளையாட வேண்டும் என்பது போலவே தோற்றம் இருந்தது என்றும், கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றனர்.

குறிப்பாக, கேப்டன் மகேந்திர சிங் தோனி மீதும், அவரது கேப்டன் ஷிப் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.  “கேப்டன் மகேந்திர சிங் தோனி விளையாடும் போது, அவரிடம் பழைய உத்வேகம் இல்ல என்றும், அவருடைய கேப்டன் ஷிப் துளியும் இல்லை” என்றும், கூறப்படுகிறது.

மேலும், “ சென்னை அணியின் நிர்வாகத்தோடு தோனி மோதலா?” என்ற சந்தேகமும் சென்னை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

அதே நேரத்தில், “சுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை அணிக்குத் திரும்ப வேண்டும் என்ற நோக்கத்திற்காக, தோனி பிடிவாதம் பிடிப்பதாகவும்” செய்திகள் வெளியானது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சென்னை அணியின் தொடர் தோல்வி காரணமாகக் கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக், “சென்னை அணியில் சில பேட்ஸ்மேன்கள், அரசாங்க வேலையில் இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். அதாவது சிறப்பாக விளையாடினாலும், விளையாடாவிட்டாலும் எப்படியும் சம்பளம் வந்து விடும் என்று நினைக்கிறார்கள்” என்று, கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, “ஐபிஎல் போட்டியில் தோனி தொடர்ந்து சரியாக விளையாடாமல் இருப்பதால், தோனியின் 5 வயது மகள் ஷிவா தோனியை பாலியல் வன்கொடுமை செய்து விடுவோம்” என்று, அருவருக்கத்தக்க வகையில் ஒருவர் சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுத்தார். இது, சக வீரர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மேலும் ஒரு வீரர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளதால், அந்த அணியில் பெருசா ஏதோ பிரச்சனை இருப்பதாகச் செய்திகள் வெளியாகத் தொடங்கி உள்ளன.

சென்னை அணியில் இடம் பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நெகிடி, தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தைப் பகிர்ந்து உள்ளார். அதில், “There’s a lot of bad things that they wishing on me” என்று, பதிவு செய்து உள்ளார். இது சென்னை அணியை மறைமுகமாகக் கூறியதா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக, லுங்கி நெகிடியும் மறைமுகமாகப் பதில் அளித்திருக்கிறார்.

அதாவது, லுங்கி நெகிடியின் இந்த பதிவுக்குக் கீழே ஒரு ரசிகர் “நீங்கள் வேறு ஐபிஎல் அணிக்குத் தகுதியானவர்” என்று, கமெண்ட் செய்திருந்தார். அந்த கமெண்டிற்கு லுங்கி நெகிடியும் லைக் செய்து உள்ளார். 

ஏற்கனவே, சென்னை அணிக்குள் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது என்பது ரசிகர்களுக்கு மிகப் பெரிய புதிராக உள்ள நிலையில், தற்போது லுங்கி நெகிடியின் இந்த கருத்தும், சென்னை அணியின் ரசிகர்களிடம் இன்னும் பல சந்தேகங்களையும் கேள்வியையும் எழுப்பி உள்ளதோடு, சென்னை அணியின் நிர்வாகத்தில் ஒரு பெரும் பிரச்சனை உள்ளதையும் உறுதி செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.