சென்னை சூப்பர் கிங்ஸின் பலம் - பலவீனம் என்னென்ன தெரியுமா?!
By Aruvi | Galatta | Sep 19, 2020, 03:40 pm
நீங்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் தீவிர ரசிகன் என்றால், கண்டிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸின் பலம் - பலவீனம் என்னென்ன என்பது பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 13 வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, இந்தியாவில் நடைபெறும் இந்த போட்டியானது, இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, ரசிகர்கள் இன்றி இந்த ஆண்டு நடைபெறுகிறது. இதனால், இந்த போட்டி கிரிக்கெட் வீரர்களுக்கும் சரி, கிரிகெட் ரசிகர்களுக்கும் சரி மிகவும் வித்தியாசமான ஒன்றாகவே இருக்கும்.
அதன்படி, சென்ற ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் கோப்பையை நூலிழையில் தவறவிட்ட சென்னை அணியானது, இந்த ஆண்டு கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் காண்கிறது. இந்த ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலபரிச்சை நடத்துகின்றன. இதனால், இன்றைய போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைத்ததாக அமைய இருக்கின்றன.
எனினும், தலை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலம் எனன்? பலவீனம் என்ன என்பதை நாம் தெரிந்துகொள்வதும் ஒரு சுவாரசியமே.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் களம் கண்ட அனைத்து சீசன்களிலும் ஃப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இது வரை 8 முறை இறுதிப் போட்டிக்குச் சென்னை அணி தகுதி பெற்று இருக்கிறது. அதிலும் குறிப்பாக, 3 முறை சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்று இருக்கிறது. இப்படியான பல சாதனைகளுடன், இந்த 13 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரிலும் இன்று முதல் களம் காண்கிறது சென்னை அணி.
- சென்னை அணியின் பேட்டிங் மற்றும் கீப்பிங்கிற்கு ஆலமரமாய் திகழ்கிறார் கேப்டன் மகேந்திரசிங் தோனி.
கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ரன் அவுட் ஆகி வெளியேறிய கேப்டன் தோனி, சுமார் 435 நாட்களுக்குப் பிறகு இன்று தான் விளையாடுகிறார்.
இதனால், அவர் வெறிபிடித்த வேங்கை போல் களம் காண்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- எப்போதும் தொடக்கம் முதலே அதிரடி காட்டும் வாட்சன் மிகப் பெரும் பலம்
- எப்போதும் நிதானமாகவே விளையாடும், சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்தித் தரும் டூ பிளசி ஒரு பலம்.
- எப்போதும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தும் அம்பத்தி ராயுடு இன்னொரு பலம்.
- அணியில் சுரேஷ் ரெய்னா இல்லாத குறையையும், நெருக்கடியையும் தமிழக வீரர் முரளி விஜய் சரி செய்வார் என்றே கூறப்படுகிறது.
- அதேபோல், மத்திய வரிசையில் அணிக்குப் பக்க பலமாகத் திகழ்கிறார் கேதர் ஜாதவ்.
- சென்னையில் அணியில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என ஆல் ரவுண்டர்களா ஜடேஜா, பிராவோ, கரண் சர்மா ஆகியோர் எல்லா விதங்களிலும் சிறப்பாக விளையாடக்கூடியவர்களா இருக்கிறார்கள்.
- பந்து வீச்சைப் பொறுத்தவரை தீபக் சாஹர், லுங்கி இங்கிடியும் பெரும் பலமாகத் திகழ்கிறார்கள்.
- ஹர்பஜனசிங் இல்லாத வெற்றிடத்தை பியூஸ் சாவ்லா நிச்சயம் பூர்த்தி செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
- அதே நேரத்தில் அணியில் பெரும்பாலும் மூத்த வீரர்கள் இருப்பது பீல்டிங்கில் கொஞ்சம் சறுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த சொதப்பல் கடந்த ஐபிஎல் போட்டியில் நிகழ்ந்திருக்கிறது.
- அணியில் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜனசிங் இல்லாததும் ஒரு பலவீனமாகவே பார்க்கப்படுகிறது. எனினும், சென்னையில் அணி தனக்கான பாணியில் வான வேடிக்கை காட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதனிடையே, “தோனிக்கு வயதாகி விட்டது என்று நினைக்காதீர்கள். இனி தான், அவர் தன்னுடைய ஒட்டு மொத்த பலத்தையும் காட்ட இருக்கிறார்” என்று ஒட்டுமொத்த பவுலர்களையும் இர்பான் பதான் எச்சரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.