இலங்கையை மிரளவைத்த இந்தியாவின் நெற்றிஅடி ..! 28 வருட தவத்தின் பலன்...
By Vijayalakshmi | Galatta | Apr 03, 2021, 02:08 pm
28 வருட தவத்திற்கு பிறகு 2011 இல் உலக கோப்பையை கைப்பற்றி சொந்த மண்ணில் மகத்தான, கம்பீரமான சாதனையை படைத்தது இந்தியா.ஏப்ரல் 2 , 2011 இந்தியாவின் பல நாள் பசி தீர்ந்த நாள். கண்களில் கண்ணீர் மல்க இந்தியாவின் ஒவ்வொரு இடங்களிலும் திருவிழா கோலம் சூழ இந்தியர்கள் வெற்றியை ருசித்த நாள் தான் அது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு கங்குலி தலைமை ஏற்று இருந்த காலகட்டம் அது. என்னதான் கிரிக்கெட்டில் இந்திய ஜாம்பவான்கள் சாதனை படைத்தாலும் உலக கோப்பைக்கான கனவு மட்டும் வெறும் கனவாகவே இருந்தது. வீரர்களை போற்றி பெருமிதப்படுத்திக்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் உலகம் தொடர் தோல்விகளால், மிகப்பெரிய அவமானங்களை சந்தித்து துவண்டு போக ஆரம்பித்தது.இந்தியாவே உலக கோப்பையை எப்போது கைப்பற்றுவோம் என்று எதிர்ப்பார்த்து காத்திருந்தது...
அசுர வீரர்களாக இருந்தாலும் உலக அளவிலான கிரிக்கெட் களத்தில் ஏதோ ஒன்று மட்டும் குறைவாகவே இருந்தது.
அந்த குறை என்ன என்பதை கண்டுபிடித்து இந்தியாவின் இளம் இரத்தங்களை கிரிக்கெட் உலகிற்கு கொண்டுவருவதற்கான முயற்சியை கையில் எடுத்தார் கங்குலி.. அப்போது தான் 19 வயதினற்கான கிரிக்கெட், மாநில அளவிற்கான ரஞ்சிப்போட்டி என இந்தியா முழுவதும் புதிய இளம் வீரர்களை குவிக்க ஆரம்பித்தார். அப்போது தான் யுவராஜ்சிங், முகமது கைப், ஹர்பஜன்சிங், ஷாகீர்கான் போன்ற இளம் இரத்தங்கள் , கங்குலியின் ஆக்கிரோஷமான தலைமையின் கீழ் இணைந்து நாட் ஃபெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை அதை சொந்த மண்ணிலேயே வீழ்த்தினார்கள்.
அதன் பிறகு தான் தோனி இந்திய கிரிக்கெட் அணியில் தடம் பதித்தார். இந்திய கிரிக்கெட் அணியிடம் நிதானம் இல்லாத காரணத்தால் உலககோப்பைக்கான மிகப்பெரிய தாகத்தில் தவித்தது.அப்போது தோனியின் தலைமையின் கீழ் புத்துணர்ச்சி பெற்ற அணியாக உருவாகியது இந்திய அணி. வரலாற்றில் முதல் முறையாக டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பதித்தது. பின்னர் உலகக்கோப்பைக்கான சர்வதேச அணிகள் பங்குபெறும் போட்டிகளில் சீறிப் பாய்ந்த ஜல்லிக்கட்டு காளைகளை போல அடுத்தடுத்து வெற்றியை கைப்பற்றி உலகக்கோப்பை இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
2011 உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், இலங்கையும் மோதியது. இரு அணிகளிலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தனர்.ஆனாலும் இந்தியாவிற்கு மீண்டும் அந்த பயம் எழுந்தது. மீண்டும் உலகக்கோப்பையின் பசி தீருமா? இந்திய மக்கள் மார்தட்டிக்கொள்ளும் நேரம் எப்போது வரும் என்றெல்லாம் கண்களில் கனவுகள் சூழ ஒவ்வொரு வீடுகள், கடைகள் என டிவி முன்பு மக்கள் காத்துக்கிடந்தனர்.
இறுதி போட்டியில் களமிறங்கிய சில நேரங்களிலேயே இலங்கை அணியின் டாப் ஆடர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்தியா. ஆனாலும் இலங்கையின் அசுரன் போல் நின்ற மகிலா ஜெயவர்த்தனே ஆட்டத்தால் இந்திய அணி கொஞ்சம் நடுங்கி போனது. ஒரு நாள் போட்டியில் 14 வது சதத்தை அடித்தார் மகிலா..88 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அப்போது இலங்கை 274 ரன்களை எடுத்தது.
275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. சேவாக்கும் , சச்சினும் தொடக்க ஆட்டக்காரர்களாக களாம் இறங்கினர்.மலிங்காவின் பந்துவீச்சில் இரண்டாவது பந்திலேயே வீரேந்திர சேவாக் ஆட்டமிழந்தார்.ஆனாலும் இந்தியா நம்பிக்கையை இழக்காமல் இருந்தது. களத்தில் சச்சின் இருக்கிறார் என்று உற்சாகமாக இருந்தனர். ஆனால் 7 வது ஓவரில் மலிங்காவின் பந்துவீச்சில் 18 ரன்களில் சச்சின் ஆட்டமிழந்தார்.இலங்கைக்கு பேரின்பமாக இருந்தது சச்சினின் விக்கெட் வீழ்ந்ததால் , ஆனால் இந்திய ரசிகர்கள் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. அதன்பின்பு இணைந்த கெளதம் கம்பீர் மற்றும் விராட் கோலி இருவரும் சிறப்பாக விளையாடினார். கம்பீர் சர்வேத ஒரு நாள் போட்டியில் 25 வது அரை சதத்தை அடித்தார். அதே நேரத்தில் கோலி 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
முக்கிய வீரர்களின் விக்கெட்டுகள் வீழ்ந்ததும் இந்திய ரசிகர்கள் துவண்டு போக ஆரம்பித்தனர். அப்போது மீண்டும் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்தனர் தோனியும், கம்பீரும். தோனி சர்வதேச ஒரு நாள் போட்டியில் 38 வது அரை சதத்தை அடித்தார்.ஆனால் தோனி அதை கொண்டாட விரும்பவில்லை. இலக்கை இன்னும் அடையவில்லை என்பதில் நிதானமாகவும், உத்வேகத்துடனுமே களத்தில் இருந்தார். இலங்கை பந்துவீச்சாளர் திசாரா பெரேராவின் பந்தில் 97 ரன்களின் ஆட்டமிழந்தார் கம்பீர்.
அதன்பிறகு இணைந்த மகேந்திரசிங் தோனியும், யுவராஜ் சிங்கும் இலங்கை பந்து வீச்சாளர்களை மிரட்ட ஆரம்பித்தனர். ஒவ்வொரு அடியும் இடி போல் கணீர் கணீர் என்று கேட்டது. பெளண்டரி லைன்கள் பக்கம் ஓடி ஓடி இலங்கை வீரர்கள் சோர்ந்து போக ஆரம்பித்தனர். இந்திய ரசிகர்களின் சத்தம் ஸ்டேடியத்தை மிரட்டிப் போட்டது. 11 பந்துகளில் 4 ரன்கள் வேண்டுமென்று இருந்த நிலையில் தோனியின் கலக்கலான ஹெலிகாப்டர் சிக்சால் இந்தியா 277 ரன்கள் எடுத்து வெற்றியை கைப்பற்றியது.
28 வருட தவத்தின் பலன் இந்தியர்களின் கண்களில் தெரிந்தது.ஒவ்வொரு தெருக்கள், வீடுகள் என இந்தியாவின் வெற்றியை தங்களின் வெற்றியாகவே நினைத்து மக்கள் கொண்டாட ஆரம்பித்தனர். வீதிகள் முழுவதும் இந்திய தேசியக் கொடியை கைகளில் ஏந்தி உற்சாகத்தில் வலம் வந்தனர். 2011 உலகக் கோப்பையை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாத அளவிற்கு இந்தியா வெற்றியின் அடியை நிலைநாட்டியது. அதுதான் முத்தையா முரளிதரன் மற்றும் சச்சினுக்கு கடைசி போட்டி.அதன்பு இருவரும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர். தன் கடைசி போட்டியில் வெற்றியை சச்சின் கைப்பற்றினாலும், இலங்கை தோல்வி முரளிதரனுக்கு வருத்தம் அளிப்பதாகவே இருந்தது.
2021 ஏப்ரல் 2, 10 வருடங்கள் ஆகிவிட்டது. இப்பொழுது நினைத்தாலும் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் அந்த நாள் அப்படியே வந்து போகும் அளவிற்கு மகத்தான நாள்...2023 இல் நடக்கப்போகும் உலகக்கோப்பையையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றது இந்திய கிரிக்கெட் உலகம்.....