2 வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி.. இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி 109 ல் ஆல் அவுட்!
இந்திய அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன் படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங் அகர்வால் - கேப்டன் ரோகித் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர்.
அதன் படி, மயங் அகர்வால் 4 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க, ரோகித் சர்மாவும் 14 ரன்களில் வெளியேறினார்.
அதன் தொடர்ச்சியாக வந்த ஹனுமா விஹாரி 31 ரன்களிலும், விராட் கோலி 23 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.
இதனையடுத்து, களமிறங்கிய ரிஷப் பந்த் சற்று நேரம் தாக்குப் பிடித்த நிலையில், 39 ரன்களில் அவுட்டானார்.
பின்னர் வந்த ஸ்ரேயஸ் ஐயர் நிதானமாகவும், சிறப்பாகவும் விளையாடினார். எனினும், அவருடன் ஜோடி சேர்ந்த ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, வெறும் 4 ரன்களில் அவுட்டாக, அஸ்வின் 13 ரன்களிலும், அக்சர் பட்டேல் 9 ரன்களிலும், முகமது ஷமி 5 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதன் காரணமாக, இந்திய அணியானது அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 252 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அப்போது, இந்திய அணியில் அதிக பட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 92 ரன்கள் எடுத்தார்.
அதன் தொடர்ச்சியாக, முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணியானது, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், தொடக்க முதலே கடுமையாக திணறிக்கொண்டிருந்தது.
குறிப்பாக, இலங்கை அணியால் இந்திய அணியின் அட்டகாசமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இலங்கை அணியில் அதிக பட்சமாக அந்த அணியில் மெத்தியூஸ் 43 ரன்கள் எடுத்தார்.
மிக முக்கியமாக, இலங்கை அணியானது 109 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆல் அவுட் ஆனது.
அந்த வகையில், இலங்கை அணிக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் ஜஸ்ப்ரீத் பும்ரா தாறுமாறாக பந்து வீசி அதிக பட்சமாக 5 விக்கெட்டுகளை தட்டித் தூக்கினார்.
அதே போல், முகமது ஷமி 3 விக்கெட்டும் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர். இவர்களுடன், அக்சர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இதன் மூலமாக, 143 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது. இவற்றுடன், இந்திய அணியானது தனது 2 வது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.