“டி20 உலகக்கோப்பை.. தோனியுடன் ஆளுமை மோதல் ஏற்படுமா?”
“ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதால், பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும் - தோனிக்கும் இடையே மோதல் ஏற்படாமல் இருந்தால் சரி” என்று, முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அச்சம் தெரிவித்துள்ளார்.
ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டதும், இதனை தோனி ஏற்றுக்கொண்டதும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் மிகவும் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள சுனில் கவாஸ்கர், இது தொடர்பாக தனது அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசும்போது, “தோனியின் தலைமையில் இந்திய அணி கடந்த 2011 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பையை வென்றோம், அதற்கு முன்பு 2007 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை டி20 யையும் நாம் வென்றோம்” என்று, நினைவுகூர்ந்து உள்ளார்.
“இந்திய வெற்றிக்கோப்பையின் வரலாறு இப்படியிருக்க, நிச்சயம் தோனியின் வருகை, இந்திய அணிக்கு பெரிய உதவியாகவே இருக்கும் என்றும், கடந்த 2004 ஆம் ஆண்டு என்னை ஆலோசகராக நியமித்த போது அப்போதைய பயிற்சியாளர் ஜான் ரைட் பதற்றமடைந்தார்” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.
“எங்கு அவரது இடத்தை நான் பறித்து விடுவேனோ என்று அப்போது அவர் பயந்தார் என்றும், ஆனால் இப்போது தோனிக்கு பயிற்சியாளராக எல்லாம் ஆகும் ஆர்வமில்லை என்பது ரவி சாஸ்திரிக்குத் தெரியும் என்றும், இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட வாய்ப்பில்லை” என்றும், அவர் கூறினார்.
“ 'ரவி சாஸ்திரி, தோனி, கோலி கூட்டணி' ஒன்று சேர்ந்து பணியாற்றினால், அது இந்திய அணிக்கு நன்மைகள் பலவற்றைத் தரும் என்றும், ஆனால் அணித் தேர்வு மற்றும் உத்தி குறித்து நிச்சயம் ஒத்துப் போகாத கருத்து மாறுபாடுகள் இருக்கவே செய்யும்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
“இது இந்திய அணி மீது நிச்சயம் விளைவை ஏற்படுத்தும் என்றும், ஆனால் தோனியின் நியமனமே இந்திய அணிக்கு பெரிய உற்சாகமூட்டக் கூடியது தான்” என்றும், அவர் நினைவுபடுத்தி உள்ளார்.
“தோனிக்கு எல்லாம் தெரியும் என்றும், அவர் சிறந்த அனுபவசாலி என்றும், தோனி சர்வதேச கிரிக்கெட்டில் செயல் பூர்வமாக இருந்த போது, தோனியைக் காட்டிலும் அதிரடி வீரர் யாருமே கிடையாது” என்றும், அவர் புகழாரம் சூட்டி உள்ளார்.
“எனினும், இதன் காரணமாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு விடக் கூடாது என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்றும், அவர் தனது அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
“ரவி சாஸ்திரியும், தோனியும் ஒரே வேவ்லெந்தில் பணியாற்றினால் அது இந்தியாவுக்கு பெரிய விசயம் தான்” என்றும், சுனில் கவாஸ்கர் வெளிப்படையாகவே தனது அச்சத்தைச் சுட்டிக்காட்டி உள்ளார்.