கொரோனா தொற்றால் உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட பொதுமுடக்க அறிவிப்பால் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் சிக்கலில் உள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால் 2021 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 9.6 கோடி மக்கள் வறுமை நிலைக்கு செல்வர் என ஐக்கிய நாடுகளின் அவை தெரிவித்துள்ளது. இதனால் வறுமைக் கோட்டிற்கு கீழ் செல்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தெற்காசியாவில் தொற்றுநோய்க்கு முந்தைய பெண் வறுமை விகிதம் 2021 ஆம் ஆண்டில் 10 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது, ஆனால் இப்போது அது 13 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக ஐ.நா., சபை பெண்கள் நல நிர்வாக இயக்குனர் பூம்சைல் மலம்போ நகூகா தெரிவித்துள்ளதாவது:
``கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் 25 வயது முதல் 34 வயதுக்குள் உள்ள பெண்கள் வரும் 2021ம் ஆண்டு அதிகமாக பாதிப்படைந்து வறுமை கோட்டுக்கு கீழ் தள்ளப்படுவர். தெற்காசிய நாடுகளான வியட்நாம், பிலிப்பைன்ஸ், நேபாளம், பூட்டான், இந்தியா, சீனா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இளம் பெண்கள் வேலை வாய்ப்பின்றி அவதி அடைவர். குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய தெற்காசிய நாடுகளில் கிட்டத்தட்ட 4.5 கோடி பெண்கள் இந்த பொருளாதார வீழ்ச்சியால் வாழ்வாதாரம் இன்றி அவதி அடைவர்.
உலகிலேயே தெற்காசிய நாடுகள் மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் சர்வதேச வறுமை கோட்டிற்குகீழ் வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முன்னர் இப்பகுதிகளில் வாழும் பெண்களின் சர்வதேச வறுமைக் கோடு அளவு 10 சதவீதமாக இருந்தது. தற்போது 13 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 100 ஆண்களுக்கு 118 பெண்கள் 2021ம் ஆண்டில் இருப்பர் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்களைவிட பெண்களை அதிகமாக வாடுவது தெரியவந்துள்ளது. உலகம் முழுக்க கொரோனா தாக்கம் முடிந்த பின்னர் 9.5 கோடிபேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் தள்ளப்படுவர். இதில் 4.5 கோடி பேர் பெண்கள். 2030ம் ஆண்டு முடிவில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்"
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
'பல ஆண்டுகளாக தெற்காசிய நாடுகளில் நிலவி வந்த வறுமை படிப்படியாக அந்தந்த நாட்டு அரசுகளால் போகப்பட்டு பெண்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது வைரஸ் தாக்கம் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் அதள பாதாளத்திற்கு தள்ளியுள்ளது' என, பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்
இதில் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் கீழ்நோக்கி பயணம் செய்துகொண்டிருந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. கொரோனா முடக்கத்தால் மேலும் பாதிப்படைந்து (மைனஸ்)-23.9சதவீதத்திற்கு சென்றுவிட்டது. ஏற்கனவே இருந்த பொருளாதார மந்தநிலை, கொரோனா முடக்கமும் சேர்ந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. அரசாங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் ஆதாரப்பூர்வமாக நமக்கு சொல்வதும் இதைத்தான். இதுபற்றி பேசிய பொருளாதார நிபுணர்கள், ``முன்பே ஏற்பட்ட சுனக்கம் தற்போது அதிகரித்துள்ளது. குறைந்தபட்சம் முந்தைய காலத்தில் நாம் சரியான பொருளாதார முடிவுகளை எடுத்திருந்தால், கொரோனாவால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்திருக்கலாம். ஆனால் தற்போது சரிவில் இருந்து பாதாளத்திற்கு சென்றுவிட்டோம்" என்று கூறியுள்ளனர்.