“நான் ஒரு ஏழை, எளிமையாகத் தான் இருப்பேன்” என்று, ஆ. ராசா விமர்சனத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்து உள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் முதல், கட்சியின் கடைசி தொண்டன் வரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் படி, திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான ஆ. ராசா, தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய போது, தமிழக முதல்வர் எடப்பாடி
பழனிசாமியை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் செருப்புடன் ஒப்பிட்டுப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இப்படி, ஆ. ராசா பேசியதாகக் கூறப்படும் அந்த பேச்சு, அதிமுக கட்சி மற்றும் தொண்டர்களிடையே கடும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், ஆ. ராசா பேசியதாகக் கூறப்படும் பேச்சுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது மதுரை பரப்புரையின் போது பதில் அளித்துள்ளார்.
மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “நான் ஸ்டாலினின் செருப்பை விட விலை குறைந்தவர் என ஆ. ராசா ஒரு கூட்டத்தில் பேசுகிறார், நான் அப்படியே இருந்து விட்டு போகிறேன். நான் ஒரு விவசாயி. ஒரு ஏழை என்பவன், எளிமையாகத் தானே இருப்பான்” என்று, ஆ. ராசாவின் விமர்சனம் பற்றி குறிப்பிட்டு அதற்கு சரியான பதிலடியும் கொடுத்து உள்ளார்.
மேலும், “உங்களைப் போல, 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி கொள்ளையடித்தவர்கள் அப்படித் தான் பேசுவார்கள்” என்றும், மிக கடுமையாக அவர் விமர்சித்துப் பேசி உள்ளார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “கண்ணுக்குத் தெரியாத காற்றைக் கூட வைத்து ஊழல் செய்தவர்கள் திமுகவினர் தான்” என்றும், கடுமையாகப் பதிலடி கொடுத்து பேசினார்.
தற்போது, கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “குமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்படாது” என்று, உறுதி அளித்தார்.
“கன்னியாகுமரி தொகுதியில் வேளான் பணி, மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக உள்ளது என்றும், தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால் மீனவர்கள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும்” என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
“அதேபோல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலும் மாநில மக்கள் அனைவருக்கும் நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தும் அரசாக அதிமுக அரசு உள்ளது” என்றும், முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.