“அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்.. தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்” என்று, சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்ரை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் அதிமுகவுடன் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சு வார்த்தையில் அமித்ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈடுபட்டு இருந்தார். அப்போது, சசிகலாவை அதிமுக வில் இணைப்பது தொடர்பாக அமித்ஷா பேசியதாகத் தகவல்கள் வெளியானது.
குறிப்பாக, அதிமுக தலைமையிடம் ஒருமித்த கருத்து இல்லை என்றும், முக்கியமாக இபிஎஸ் - ஓபிஎஸ் உடனான பேச்சு வார்த்தையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிருப்தியில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால், சசிகலாவை அதிமுக வில் இணைப்பது தொடர்பான விசயம் வெற்றி பெறவில்லை என்றும் கூறப்பட்டது.
தற்போது அதன் தொடர்ச்சியாக, “அரசியலிலிருந்து விலகுவதாக” சசிகலா உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அந்த அறிக்கையில், “நான் என்றும் வணங்கும் ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் நாட்டில், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று ஜெயலலிதா நமக்குக் காட்டிய திமுகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து விவேகமாக இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழ் நாட்டில் நிலவிட ஜெயலலிதாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்” என்றும், அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.
மேலும், “என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான
நன்றிகள்” என்றும், மிகவும் உருக்கமான அந்த அறிக்கையில் அவர் கூறியிருக்கிறார்.
“ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தைச் செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித் தான் நான் இருக்கிறேன் என்றும், நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை” என்றும், சசிகலா தெரிவித்து உள்ளார்.
“ஜெயலலிதாவின் அன்புத் தொண்டர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்” என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் ஜெயலலிதாவிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன்” என்றும், மிகவும் உருக்கமாக அந்த அறிக்கையில் சசிகலா தெரிவித்து உள்ளார்.
இதனால், தமிழக அரசியலில் எதிர்பார்க்காத திடீர் திருப்பமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, “சசிகலாவின் அறிக்கை எனக்கு சோர்வை வரவழைக்கிறது” என்று, டி.டி.வி.தினகரன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.