“விடுதலையானலும் சசிகலா 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது!”

“விடுதலையானலும் சசிகலா 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது!” - Daily news

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை முடிந்து சசிகலா இன்று விடுதலையானார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் இருந்த சசிகலா, இன்றுடன் தண்டனை காலம் நிறைவடைந்து சிறையில் இருந்து 
விடுதலையானார்.  

அதாவது, சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 2017 ஆம் ஆண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். 

தற்போது, அவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது. இதனால், அவர் கடந்த 20 ஆம் தேதி முதல் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை இளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் தான், சசிகலாவின் 4 ஆண்டுக்கால தண்டனை காலம், இன்றுடன் நிறைவடைந்து. சசிகலாவின் விடுதலைக்கான முழுப்பணிகள் முடிவடைந்து, கர்நாடக உள்துறை அமைச்சகமும் விடுதலை செய்ய அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, அவர் முறைப்படி இன்று விடுதலை செய்யப்பட்டார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சசிகலாவின் விடுதலை பத்திரத்தில், இன்று காலை 9.30 மணி அளவில், அவர் சிகிச்சை பெறும் விக்டோரியா மருத்துவமனைக்கே சென்று, சிறைத்துறையினர் கையொப்பம் பெற்றனர். அப்போது, விடுதலை செய்யப்பட்டதற்கான ஆவணங்களை மருத்துவமனையில் சசிகலாவிடம் சிறைத்துறை ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து சிறை நடவடிக்கைகள் முடிவடைந்து, காலை 10.30 மணியளவில், சசிகலா விடுதலை செய்யப்பட்டார் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மருத்துவமனையில் இருந்த போலீசாரின் காவல் தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டது. 

அத்துடன், விடுதலையான சசிகலாவைத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அவரது உறவினர்கள் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள உள்ளன. சசிகலா சிகிச்சை பெறும் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை வளாகத்தில் அவரது ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர்.

அதே நேரத்தில், வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி தான் சசிகலா சென்னை வருவார் என்றும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தல் இந்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா தற்போது விடுதலையாகி உள்ளதால், இனி வரும் நாட்களில் தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கும் என்றும் கூறப்படுகிறது. 

எனினும், ஊழல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த குற்றவாளிகள் யாரும், விடுதலையான நாளில் இருந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன் படி, தண்டனை அனுபவிக்கத் தொடங்கிய நாளில் இருந்து சசிகலா 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால், தற்போது சசிகலா விடுதலையானாலும், அடுத்த வரும் 6 ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சென்னை மெரினா கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் திறந்துவைத்தார். இந்த திறப்பு விழால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக் கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வு அதிமுக தொண்டர்கள் மத்தியில் புது உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment