“ஓ.பன்னீர் செல்வத்தின் அடுத்த பிளான் என்னத் தெரியுமா?” ஓபிஎஸ்-ஐ உற்று நோக்கும் இபிஎஸ்!
“ஓ.பன்னீர் செல்வம் விஸ்வரூபம் எடுத்து, விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல இருப்பதாக” கோவை செல்வராஜ் தெரிவித்து உள்ளார்.
அதிமுக பொதுக்குழுவில் இருந்து ஓபிஎஸ் கோபமாக வெளியேறிய நிலையில், “ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும்” என்று, இபிஎஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால், “அதிமுக பொதுக்குழுவில் நடந்த சம்பவங்கள் சர்வாதிகாரத்தின் உச்சம்” என்று, வைத்திலிங்கம், அன்றைய தினமே காட்டமாக கூறி இருந்தார்.
இது குறித்து அப்போது சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், “புதிதாக கொண்டு வந்த தீர்மானத்தை நிராகரித்து வெளிநடப்பு செய்தோம் என்றும், அதிமுக வின் நடைமுறைகளை மாற்றியுள்ளனர்” என்றும், குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் நேற்று முன் தினம் டெல்லி சென்றார். அங்கு பாஜக நிர்வாகிகளை சந்தித்து தன்னுடைய நிலையை விளக்கி பேசினார். இதனையடுத்து, டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்து தனது தரப்பு விளக்கத்தை அளித்துவிட்டு, அவர் இன்று மாலை டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார்.
இந்த நிலையில் தான், அதிமுகவில் தனக்கு மேலும் ஆதரவு திரட்டும் வகையில் ஓ.பன்னீர் செலவ்ம் தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பான பயண விபரம், விரைவில் தொடங்கும் என்றும், அடுத்த பொதுக் குழுவிற்கு முன்பாக தென் மாவட்டங்களில் நிலைமையை மாற்ற ஓ,பன்னீர் செல்வம் முயலுவார் என்கிற தகவலும் தற்போது வெளியாகி உள்ளன.
இந்த சூழலில் தான், ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் தான் உள்ளனர் என்றும், தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர் செல்வம் விஸ்வரூபம் எடுத்து விரைவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்” என்றும், கூறினார்.
மேலும், “11 ஆம் தேதி பொதுக் குழு என்பது, இனி கனவில் தான் நடக்கும் என்றும், அதிமுகவில் குழப்பம் விளைவிக்கவே பழனிசாமி தரப்பு முயற்சி செய்கிறது” என்றும், அவர் குற்றம்சாட்டினார்.
“அதிமுகவை கமெப்னி போல் நடத்தி அழிவுப்பாதைக்கு அழைத்து செல்கின்றனர்” என்றும், அவர் பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக வில் எடப்பாடி தலைமையிலான ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜக தலையீடு இல்லை” என்று, குறிப்பிட்டார்.
குறிப்பாக, “ஓ.பன்னீர் செல்வத்தால் தொண்டர்களுக்கு மன உளைச்சல் தான் ஏற்படுகிறது” என்றும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.