போக்குவரத்து போலீசார் அபராதம் கேட்டதால் கடும் ஆத்திரமடைந்த பெண் ஒருவர், தனது தாலி சங்கிலியைக் கழற்றி கொடுத்துவிட்டு ஆவேசமாகச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
அதாவது, கர்நாடக மாநிலத்தில் அன்றாடம் நடைபெறும் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் போக்குவரத்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன் படி, போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
குறிப்பாக கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவின் பல பகுதிகளிலும் தெருவுக்குத் தெரு நிற்கும் போக்குவரத்து போலீசார், அந்த வழியாக வரும் வாகனங்களைச் சோதனையிடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முக்கியமாக, ஹெல்மெட் அணியாமல் இருப்பது, போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு விதிகளையும் கடுமையாகப் பின்பற்றி, வாகன ஓட்டிகளைப் பிடித்து போக்குவரத்து போலீசார் தொடர்ச்சியாக அபராதம் விதித்து வருகிறார்கள்.
அப்படி, விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் குறைந்தபட்சம் அபராத தொகையாக 500 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கிறது. அதிக பட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தும் நிலைக்கும் வாகன ஓட்டிகள் தள்ளப்படுகிறார்கள் என்றும், கூறப்படுகிறது.
இப்படியாக, அபராதம் விதித்தும் பல வாகன ஓட்டிகள், குறிப்பிட்ட இந்த அபராத தொகையைச் செலுத்தாமலேயே உள்ளனர். இந்த வகையில், சுமார் 40 கோடி ரூபாய் அபராதம் வசூல் ஆகாமல் அப்படியே நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக, வசூல் ஆகாமல் இருக்கும் அந்த அபராத தொகையை வசூல் செய்ய, பெங்களூரு நகரில் இருக்கக்கூடிய வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கிக் கொண்டால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.
இப்படியான சூழ்நிலையில் தான், கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் உக்கேரி தாலுகா உலோஹட்டி கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான பாரதி விபூதி என்பவர், தன்னுடைய கிராமத்திலேயே ஓட்டல் ஒன்று வைத்து நடத்தி வருகிறார்.
இதன் காரணமாக, தனது கணவருடன் பெலகாவி டவுனில் உள்ள சந்தைக்கு தன்னுடைய ஸ்கூட்டரில் காய்கறி வாங்க பாரதி சென்று உள்ளார். அப்போது, பாரதியின் கணவர் ஹெல்மெட் அணிந்து இருந்தார். ஆனால், பின்புறம் அமர்ந்திருந்த பாரதி ஹெல்மெட் அணியவில்லை என்று கூறப்படுகிறது.
அப்போது, அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போக்குவரத்து போலீசார், ஸ்கூட்டரை மறித்தனர். அத்துடன், ஹெல்மெட் அணியாமல் வந்தது குறித்து பாரதியிடம் போலீசார் விசாரித்து உள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக 500 ரூபாய் அபராதமாக விதித்து உள்ளனர். ஆனால், அந்த பெண் பாரதி தன்னிடம் 500 ரூபாய் இல்லை என்று கூறி உள்ளார்.
குறிப்பாக, “நான், விபரம் தெரியாமல் ஹெல்மெட் அணியாமல் வந்து விட்டதாகவும், இந்த ஒரு முறை எங்களை விட்டு விடுங்கள்” என்றும், போலீசாரிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆனால், அதனை ஏற்க மறுத்த போக்குவரத்து போலீசார் அபராதம் வாங்குவதிலேயே குறியாக இருந்து உள்ளனர். அத்துடன், 500 ரூபாய் அபராதம் செலுத்தினால் தான் விடுவோம் என்றும் பிடிவாதமாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதனால், அங்கு கூடியிருந்த பொது மக்கள் முன்னிலையில் சற்று அவமானமாகக் கருதிய அந்த பெண், “தான்னுடைய கழுத்தில் அணிந்திருந்த தாலி ஜெயினை கழற்றி, அங்கு நின்று அபராதத் தொகை செலுத்த சொல்லி அடம் பிடித்த போக்குவரத்து போலீசாரிடம் கொடுத்து உள்ளார்.
முக்கியமாக, “இந்த தாலியை விற்று அபராத தொகையை எடுத்து கொள்ளுங்கள்” என்று, ஆவேசமாகக் கூறி விட்டு அந்த பெண் பாரதி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு நின்றுகொண்டிருந்த பொது மக்கள் சிலர், தங்களது செல்போன் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோ காட்சிகள், வெளியானது முதல் அந்த மாநில போக்குவரத்து போலீசாருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எதிர்மறையான கருத்துகளைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.