”மதுரையில் எய்ம்ஸ் கொண்டு வருவோம் என 2016 இல் அறிவிக்கப்பட்டு அது கிடப்பில் உள்ளது. ஒரு செங்கல் கூட நகராமல் வீணாக உள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டிற்கு வரும். மேலும் சென்னையிலுள்ள அண்ணா நூலகம் போல, மதுரையில் பிரம்மாண்டமாக கலைஞர் நூலகம் அமைக்கப்படும்” என்று மதுரையில் தேர்தல் பிரசாரத்தின் போது மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


மதுரை மாவட்டத்தில், நான்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தின் போது பேசிய அவர், ‘’ அ.தி.மு.க வெல்வதும், பா.ஜ.க வெல்வதும் ஒன்று தான். அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத், பா.ஜ.க எம்.பியாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டிற்குள் ஒரு பா.ஜ.க உறுப்பினர் வந்தால் கூட நம்ம மாநிலத்துக்கு மிக கேடு. ‘கோமாளி அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு பாடம் புகட்ட தி.மு.கவிற்கு வாக்களிக்க வேண்டும். 


தி.மு.கவின் தேர்தல் அறிக்கை கதாநாயகன். அ.தி.மு.க தேர்தல் அறிக்கை வில்லன். வில்லன் என்றால் கூட கொஞ்சம் ரோஷம் இருக்கும். அ.தி.மு.க தேர்தல் அறிக்கை காமெடி வில்லன். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஹெலிகாப்டர், ஏரோ பிளேன், ரயில் கூட தருவோம் என நாளை தேர்தல் அறிக்கை கொடுப்பார்கள் அதிமுகவினர்.


தடுப்பூசி பலன் தருகிறது. எனவே, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். அனைவரும் மாஸ்க் அணியாமல் வெளியே வராதீர்கள். அண்ணனாக, தம்பியாக உங்களிடம் இதை கோரிக்கையாக வைக்கிறேன். என்று பேசினார்.