“தேர்தல் பிரசாரத்தில் என்னை பயன்படுத்திக் கொண்டால் பாஜக வுக்கு நல்லது” என்று, நடிகர் எஸ்.வி.சேகர் மிரட்டும் வகையில் பேட்டி அளித்து உள்ளார். நடிகரும், பாஜக கட்சி பிரமுகருமான எஸ்.வி.சேகர், அவ்வப்போது புதிய புதிய சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையான ஒன்று.
அதாவது, கடந்த ஆண்டு ஊடகத்துறையில் பணியாற்றும் பெண் செய்தியாளர்களை விமர்சனம் செய்தார். இது தொடர்பாகப் பெண் செய்தியாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது, எஸ்.வி.சேகர் சில காலம் தலைமறைவாக இருந்ததாகக் கூறப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக “அதிமுக கட்சியின் கொடியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் படத்தை நீக்க வேண்டும்” என்று நடிகர் எஸ்.வி. சேகர் பேசி, அடுத்ததொரு சர்ச்சையில் சிக்கினார்.
அப்போது, இது தொடர்பாகப் பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “நடிகர் எஸ்.வி சேகர் எல்லாம் ஒரு அரசியல்வாதியே கிடையாது. அவர் வாயில் வருவதை எல்லாம் ஔறி கொட்டுவார். வழக்கு என்று வந்து விட்டால் ஓடி ஒளிந்து கொள்வார்” என்றும், பதில் அளித்தார்.
அதன் தொடர்ச்சியாக, தேசியக் கொடியை அவமதித்ததாக நடிகரும், பாஜக கட்சி பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில், “எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டால் அவரை கைது செய்ய மாட்டோம்” என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் மன்னிப்பு கேட்டார்.
அந்த வகையில், தற்போது பேட்டி அளித்த அவர் “தேர்தல் பிரசாரத்தில் என்னை பயன்படுத்திக் கொண்டால் பாஜக வுக்கு நல்லது” என்று, நடிகர் எஸ்.வி.சேகர் மிரட்டும் வகையில் பேட்டி அளித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வருகை தந்த நடிகர் எஸ்.வி.சேகர், செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்துப் பேசினார்.
அப்போது, “தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி, அதிக இடங்களில் வெற்றி பெரும்” என்று, குறிப்பிட்டார்.
“இதனால், 3 வது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 9, 10, 11 ஆம்
வகுப்பு மாணவ - மாணவிகள் அனைவரும் தேர்ச்சி, விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி, 6 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி உள்பட பல திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அறிவித்து உள்ளது என்றும், இதுவும் அதிமுக கூட்டணிக்குச் சாதகமாக உள்ளது” என்றும், கூறினார்.
மேலும், “இந்த சட்டசபை தேர்தலில் பிரசாரத்துக்கு பாஜக என்னைப் பயன்படுத்திக் கொண்டால், அவர்களுக்குத் தான் அது நல்லது” என்றும், சற்று மிரட்டலாக
அவர் பேசியதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து பேசிய அவர், “தேர்தல் பிரசாரத்துக்கு என்னை அழைப்பார்கள் என்று, நான் நம்பிக்கையோடு உள்ளேன்” என்றும் தெரிவித்தார்.
“வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்வதால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும், திமுக வினர் தவறான கருத்துகளை முன் வைத்துப் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்றும், அது இந்த தேர்தலில் எடுபடாது” என்றும், அவர் கூறினார்.
“மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனியாக நின்று தேர்தலைச் சந்தித்தால் கூட, ஓரளவுக்கு வாக்குகள் கிடைக்கும் என்றும், அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, “சசிகலா வருகையால் இந்த தேர்தலில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படப் போவது இல்லை என்றும், நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது கனவில் கூட நடக்காது” என்றும், அதிரடியாகப் பேசினார்.
அத்துடன். “அவருக்கு இனி எந்த விதமான வாய்ப்பும் கிடையாது என்றும். அவர் பொது மக்களின் நம்பிக்கையையும் இழந்து விட்டார்” என்றும், மீண்டும் சர்ச்சைக்குறிய வகையில் எஸ்.வி.சேகர் பேசினார். இது, இணையத்தில் வைரலானது.