“பாஜகவை மையப்படுத்தியே இனி இந்திய அரசியல்! அடுத்த 20 வருடத்தில் காங்கிரஸ் நிலை பாஜகவிற்கு வரும்..!” பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்
“பாஜகவை மையப்படுத்தியே இனி அடுத்த 20, 30 ஆண்டுகளுக்கு இந்திய அரசியல் இருக்கும் என்றும், அதன் தொடர்ச்சியாகவே காங்கிரஸ் கட்சிககு ஏற்பட்ட நிலை, பாஜகவிற்கு வரும்” என்றும், பிரசாந்த் கிஷோர் ஓபனாக பேசி உள்ளார்.
சம கால இந்திய அரசியலை கரச்சி குடிச்ச ஜாம்பவானாக வலம் வருகிறார் பிரசாந்த் கிஷோர்.
இந்திய அரசியலின் நுணுக்கங்கள், சம காலத்தில் எதை செய்தால், எதை பேசினால், எந்த பிரச்சனைகளை கையில் எடுத்தால் வெற்றிப் பெற முடியும் என்கிற அரசியல் சித்தாந்தம் மற்றும் அரசியல் சூத்திரம் தெரிந்த சூத்திரராக வலம் வருகிறார் பிரசாந்த் கிஷோர்.
இப்படியான சூழலில் தான் “நாட்டு மக்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இன்னும் 20, 30 வருடங்களுக்கு பாஜகவை மையப்படுத்தியே இந்திய அரசியல் இருக்கும்” என்று, பிரசாந்த் கிஷோர் தனது தேர்தல் வியூக நிலைபாட்டை வெளிப்படையாக கூறி உள்ளார்.
அதாவது, டெல்லியில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கம் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர், “இந்திய அரசியலில் பாஜக மிகப் பெரிய சக்தியாக உருவாகிஉள்ளது” என்று, குறிப்பிட்டார்.
அத்துடன், “எந்தவொரு விஷயமோ அல்லது கருத்தியலோ அதன் உச்சத்தை அடைந்த பிறகு, கட்டாயம் அது சரிவை சந்திக்கும் என்பது தான் விதி” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இதனால், “பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிககு ஏற்பட்ட இந்த நிலை ஏற்படும் என்றும் பலரும் கருதுகின்றனர் என்றும், இதனை நானும் ஒத்துக் கொள்கிறேன்” என்றும், அவர் வெளிப்படையாகவே பேசி உள்ளார்.
மேலும், “இந்த விஷயம், இப்போது உடனே நடைபெற்று விடாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், அதே நேரத்தில் பாஜகவின் சரிவு என்பது அடுத்த 5, 10 ஆண்டுகளுக்கு நடைபெற வாய்ப்பு என்பது துளியும் இல்லை” என்றும், அவர் தெளிவுப்பட தெரிவித்தார்.
அதே போல், “அகில இந்திய அளவில் ஒரு கட்சியால் 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற முடிகிறது என்றால், அந்த கட்சி அவ்வளவு எளிதில் வலுவிழந்து விடாது” என்பதையும், அவர் சுட்டிக்காட்டினார்.
முக்கியமாக, “இனி வருகிற அனைத்து தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெறும் என்று நான் கூறவில்லை” என்றும், அவர் விளக்கம் அளித்தார்.
குறிப்பாக,“இனி அடுத்த 20, 30 வருடங்களுக்கு பாஜகவை மையப்படுத்தி தான் இந்திய அரசியல் இருக்கும் என்றும், இன்னும் சரியாக கூற வேண்டும் என்றால், அடுத்த 20, 30 வருடங்கள் பாஜகவை ஒன்று ஆதரிக்க வேண்டும், அல்லது எதிர்க்க வேண்டும் என்கிற நிலை இருக்கும் என்றும், மாறாக பாஜகவை யாரும் புறக்கணித்துவிட முடியாது என்கிற சூழல் இருக்கும்” என்றும், அவர் தெளிவுப்பட பேசினார்.
மிக முக்கியமாக, “சுதந்திர இந்தியாவில் முதல் 40 வருடங்கள் காங்கிரஸ் இந்த நிலையில் தான் இருந்தது என்றும், இதே நிலை பாஜகவிற்கும் வரும்” என்றும், பிரசாந்த் கிஷோர் பேசினார்.
இதனிடையே, பிரசாந்த் கிஷோர் இந்திய அரசியல் பற்றி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.