முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஓட்டல் ஊழியர்! விசாரணையில் வெளிவந்த தகவலால் அதிர்ந்த போலீசார்!
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஓட்டல் ஊழியர் கூறிய காரணத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு மர்மநபர் ஒருவர், செல்ஃபோன் மூலம் அழைத்துப் பேசியுள்ளார். அப்போது அந்த மர்மநபர், ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்துள்ளேன். அடுத்த சில நிமிடங்களில் அது வெடித்துச் சிதறும். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்’ என்று கூறிவிட்டு, செல்ஃபோன் இணைப்பை துண்டித்துவிட்டார்.
வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்ததால், எச்சரிக்கையான காவல்துறை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தேனாம்பேட்டை காவல்நிலையத்தைச் சேர்ந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்களை கொண்டு மு.க.ஸ்டாலின் வீட்டை சோதனை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய்கள் உதவியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டை சுற்றி வெடிகுண்டு இருக்கிறதா என தேடுதலில் காவல்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு வைத்திருப்பதாக நடந்த சோதனையில், யாரும் வெடிகுண்டு வைத்திருக்கவில்லை என்று காவல்துறைக்கு தெரியவந்தது.
மேலும் இது வெறும் வெடிகுண்டு மிரட்டல் தான் என்றும் காவல்துறையினர் அறிந்து கொண்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்ததும் பெரும் பரபரப்பு நிலவியது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மிரட்டல் விடுத்தவரின் செல்ஃபோன் எண்ணை வைத்து, மிரட்டல் விடுத்த நபரை, தீவிரமாக தேடி போலீசார் கண்டுப்பிடித்தனர்.
இதில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதான பழனிவேல் என்ற நபர் தான், காவல்துறை கட்டுப்பாட்டு அறை 100-க்கு அழைத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, பழனிவேலை கைது செய்து, விசாரணைக்காக, காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பழனிவேலிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியுள்ளனர்.
அதில் வெடிகுண்டு விடுத்த பழனிவேல், மாம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல்காரராக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. 15 நாட்களுக்கு முன்புதான் ஓட்டலில் சமையல்காரராக பணிக்கு சேர்ந்துள்ளார். 7-ம் வகுப்பு வரை படித்துள்ள பழனிவேல், மது அருந்தும் பழக்கம் உடையவர் என்றும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘பழனிவேல், தான் திமுக அனுதாபி என்றும், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படங்களில், ஏதாவது ஒரு படத்தில் பாட்டு பாட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த வந்ததாகவும்’ விசாரணையில் பழனிவேல் தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் அறிமுகம் கிடைப்பதற்காக, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் அறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரபலமாகி, உதயநிதி ஸ்டாலின் படத்தில் பாடவாய்ப்புக் கிடைக்கலாம் எனக் கருதி, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக பழனிவேல் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒன்றில் பாட்டு பாட வேண்டும் என்று தீராத ஏக்கத்துடன் இருப்பதாக, தனக்கு தெரிந்தவர்களிடம் ஏற்கனவே சமையல்காரர் பழனிவேல் கூறி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.