காங்கிரஸ் கட்சியின் சார்பில் உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தி களமிறங்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் விருப்பம் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி அடுத்த ஆண்டுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து வரும் 2022-ம் ஆண்டு, பிப்ரவரி - மார்ச் மாதங்களில், உத்தரப்பிரதேசத்தில் 403 சட்டப்பேரவை  தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்திய நாட்டின் மிக முக்கியமான தேர்தலாக உத்தரப்பிரதேச மாநில தேர்தல் கருதப்படுகிறது. ஏனெனில் தேசிய அரசியலை தீர்மானிக்கக் கூடிய மிக முக்கிய மாநிலமாக, உத்தரப் பிரதேசம் திகழ்கிறது. இதனால் இம்மாநிலத்தை கைப்பற்ற, ஆளும்  பாரதீய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும், கூட்டணிகள் அமைத்து தேர்தலில் வெற்றிபெற தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. 

இதனுடன் உத்தரப்பிரதேச மாநில கட்சிகளான முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் முனைப்பில் உள்ளன. 

p1

அதுமட்டுமின்றி தங்களது செல்வாக்கை நிரூபிக்க அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, மேற்குவங்க முதல்வர் மம்மா பானர்ஸியின் திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் இறங்கியுள்ளன. இந்த நிலையில், சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் செய்தியாளர்களை சந்தித்தார் .

அப்போது பேசிய அவர், ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணியின், இரண்டாவது கட்ட ஆட்சியை வீழ்த்த சதிவலை பின்னி, அவதுாறு பரப்பியது வரிசையாக வெளி வருகிறது. காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக, ஆதாரமற்ற குற்றச்சாட்டை, முன்னாள் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) வினோத்ராய் கூறினார். இதன் அடிப்படையில், தேர்தல் பிரசாரம் நடத்தப்பட்டு அரசியல் ரீதியாக, பாரதீய ஜனதா கட்சி பலனடைந்து ஆட்சி அமைத்தது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது, அவதுாறு குற்றச்சாட்டுகளை பரப்பிய, முன்னாள் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் வினோத்ராய், நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும்  காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் இத்தனை நாள் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று தான் அவர் நலமுடன் வீடு திரும்பியுள்ளார். அவருக்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்.  

p2

நாட்டின் சட்டம் -- ஒழுங்கு மோசமான சூழ்நிலையில் உள்ளது. பிரதமர் மோடி, வாடிகனில் போப்பை சந்தித்தது நல்லது என நினைக்கிறேன். அதாவது, பிரதமர் மோடி தற்போது நல்லவர்களை சந்திக்கிறார். அதை, நான் நல்லதாக பார்க்கிறேன்.

வரும் 2022-ம் ஆண்டு நடைபெறும் உத்தரப்பிரதே சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக, பிரியங்கா காந்தி நிற்க வேண்டும் என நாங்கள் எண்ணுகிறோம். அவ்வாறு பிரியங்கா காந்தி, முதல்வர் வேட்பாளராக நின்றால், காங்கிரஸ் கட்சிக்கு உத்தரப்பிரதேசத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி கொடுப்பார். உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸின் முகம் அவர் தான். பிரியங்கா காந்தி முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பது பலரது விருப்பமாக உள்ளது. இருப்பினும் இந்த விஷயத்தில் கட்சி தலைமை சரியான முடிவு எடுத்து அறிவிக்கும். உத்தரப்பிரதேச தேர்தலில், 40 சதவீதம் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருப்பதற்கு அங்கு நல்ல வரவேற்பு உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.