“5 மாநில தேர்தல் முடிவுகளில் பாஜகவின் தொடர் வெற்றியும், காங்கிரசின் தொடர் தோல்வியும் உணர்த்த வருவது என்ன?” என்பது பற்றி, ஒரு முறை திரும்பி பார்த்துவிடலாம்.

5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது ஏன் என்பதை பார்த்தால், அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இதனால் தான், “5 மாநில சட்டப் பேரவை தேர்தலில் மக்களின் தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம்” என்று, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நேற்றைய தினம் உருக்கமாக கூறியிருந்தார்.

அதாவது, உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில், 255 தொகுதிகளில் அபார வெற்றிப் பெற்ற பாஜக 2 வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டு உள்ளது. 

குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர் சட்டமன்றத் தேர்தலில் நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற தனிப் பெரும் சிறப்பை பெற்று இருக்கிறார்.

அதுவும், உத்தரப் பிரதேசத்தில் சஹிஹாபாத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சுனில் குமார் சர்மா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் அமர்பால் சர்மாவை 2 லட்சத்து 14 ஆயிரத்து 292 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 

அதே போல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங், நொய்டா தொகுதியில் 1,81,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அத்துடன், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 111 இடங்களில் வெற்றி பெற்று, 2 வது பெரிய கட்சியாக அங்கு உருவெடுத்து, பலரையும் திரும்பி பார்க்க வைத்து உள்ளது.

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த உத்தரப் பிரதேச தேர்தலில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, நினைத்துக்கூட பார்க்காத வகையில், படு தோல்வியை அடைந்திருப்பது தான், அனைத்து தரப்பினரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

அதிலும் குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கு 2 புள்ளி மூன்று எட்டு சதவிகிதம் மட்டுமே வாக்குகள் இந்த முறை கிடைத்து உள்ளன.

பாஜக

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற முதல் காரணம், “கொரோனா முழு ஊரடங்கு காலத்தின் போது, பொது மக்களின் வாழ்வாதாரத்திற்கும், வேலை வாய்ப்புக்கும் பொது மக்கள் தவித்து வந்தபோது, மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டத்தை யோகி ஆதித்யநாத் அரசு, தீவிரமாக செயல்படுத்தியது” முதல் காரணமாக பார்க்கப்படுகிறது. 

இவை தவிர விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதும், பாஜகவிற்கு மக்கள் மீண்டும் தேர்வு செய்ய முக்கிய காரணம் என்றும், கூறப்படுகிறது.

குறிப்பாக, பாஜவின் இந்துத்துவா கொள்கையும், அதன் பாணியும் உத்தரப் பிரதேச தேர்தலில் வெற்றி பெற வெகுவாக கை கொடுத்து உள்ளது என்றே கூறலாம். 

இவற்றுடன், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரிந்து களமிறங்கியதும் பாஜகவுக்கு மிகப் பெரிய அளவில் சாதகமாக அமைந்து போனது.

காங்கிரஸ்

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த நிலையில், அங்கு ஆம் ஆத்மி கட்சியிடம் தங்களது ஆட்சியை பறிகொடுத்து தவிக்கிறது காங்கிரஸ் கட்சி. இதற்கு முன்பாக, காங்கிரஸ் கட்சியிடம் இருந்து தலைநகரான டெல்லியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி இருந்த நிலையில், தற்போது 2 வது மாநிலமாக பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்றி உள்ளது. அங்கு மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளில் வெற்றி பெற்று புதிய வரலாற்று வெற்றியை ஆம் ஆத்மி கட்சி, அங்கு பதிவு செய்து அசத்தி இருக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் பகதூர் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட செல்போன் ரிப்பேர் செய்யும் கடையின் உரிமையாளரான லப் சிங் உகோகே, காங்கிரஸை சேர்ந்த முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை தோற்கடித்து, அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

அத்துடன் கோவா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் மிகவும் மோசமான படு தோல்வியை தழுவி இருக்கிறது.

5 மாநிலங்களின் முடிவுகள் காங்கிரஸ் கட்சியின் எதிர்பார்ப்புக்கு எதிராக வந்திருப்பது, மக்களின் நம்பிக்கையை பெறத் தவறிவிட்டதையே காட்டுகிறது.

இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்து உள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, “தேர்தல் முடிவுகளை சுயபரிசோதனை செய்வதற்காக காங்கிரஸின் காரிய கமிட்டி கூட்டத்தை விரைவில் கூட்ட கட்சி முடிவு செய்துள்ளதாக” தெரிவித்து உள்ளார்.

இப்படியாக, 5 மாநில தேர்தல் முடிவுகளானது, இந்தியாவின் அரசியல் வரைபடத்தில் சில முக்கிய மாறுதல்களை வண்ணங்களில் மாற்றி காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.