உடல் எடை அதிகமாக இருந்தால் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், இதயநோய் போன்ற நோய்களை உருவாக்கும். உடல் எடை அதிகமாக இருப்பதற்கு மருத்து ரீதியாக பல காரணங்கள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஒரு முக்கிய காரணியாக அமைகிறது. எப்பொழுதும் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கத்தை குறைபாடு என்றே மருத்துவர்கள் சொல்கிறார்கள். 


சரியான உணவை சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு சரியான அளவில் மட்டும் உணவை எடுத்துக்கொள்வது. அதிகமாக சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் எதனால் அதிகமாக சாப்பிடுகிறார்கள் என்ற காரணத்தை கண்டு பிடித்துவிட்டால், அதிலிருந்து மீள்வது சுலபமே.


நன்றாக கவனித்துப் பார்த்தால் , மன அழுத்தம் இருக்கும் போது அதிகமாக சாப்பிடுவோம். நல்லா சாப்பிட்டு விட்டு, தூங்கினால் போதும், மன அழுத்தம் பறந்து விடும் என்று பலர் சொல்ல கேட்டு இருப்போம்.  மன அழுத்ததிலிருந்து மீள ஒரு சில சமயங்களில் மட்டும் இந்த வழி ஓ.கே தான் என்றாலும், தொடர்ச்சியாக இதை பின்பற்ற கூடாது. யோகா, உடற்பயிற்சி, பிடித்ததை செய்வது என மன அழுத்ததில் இருந்து மீள வேண்டும்.


சாப்பிடும் போது சாப்பாட்டில் மட்டுமே கவனம் இருப்பது அவசியம். காரணம் அவ்வாறு முழுகவனம் இருந்தால் மட்டுமே எவ்வளவு சாப்பிடுகிறோம் என அளவை கவனித்து அளவாக சாப்பிட முடியும்.


பழங்கள் , காய்கறிகள் அதிகமாக உணவில் எடுத்துக்கொள்ளும் போது ஸ்நாக்ஸ் வகைகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை கட்டுப்படுத்தலாம். உடல் எடைகுறைக்கும் போது சில வேளைகளில் சாப்பாட்டை தவிர்ப்பார்கள் சிலர். இதனால் அதிக பசி தூண்டப்பட்டு அடுத்த வேளை உணவில் அதிக அளவு கலோரிகள் எடுத்துக்கொள்ள நேரும். இது தவறாக ட்யட் முறை. மூன்று வேளையும் உணவை தவிர்க்காமல் , சரியான அளவில் எடுத்துக்கொண்டால் போதும். 


வேக வேகமாக சாப்பிடும் போது நம்மை அறியாமல் அதிகமான உணவை எடுத்துக்கொள்ளுவோம். பொறுமையாக மென்று விழுங்கினால் வயிறு விரைவில் நிறையும். 


எப்போதும் கையில் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளை வைத்திருந்தால், பசி எடுக்கும் நேரத்தில் சரியான உணவை சாப்பிட முடியும். இதனால் பசியெடுக்கும் நேரத்தில் ஹோட்டல் உணவுகளை தேர்வு செய்வதை தவிர்க்க முடியும்.