சென்னையில் ஃபேஸ்புக் மூலம் அழகான பெண்கள் குறிவைக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் பணம் மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் ஏமாற்றப்படும் மற்றும் மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். அந்த
வரிசையில், சென்னையில் மேலும் ஒரு மோசடி சம்பவம் அரங்கேறி உள்ளது.
சென்னை வேப்பேரியைச் சேர்ந்த 28 வயதான திலீப் என்பவர் தான், இந்த மோசடியில் ஈடுபட்டவர் ஆவார்.
வேப்பேரியைச் சேர்ந்த 28 வயதான திலீப் மீது, சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்த தொழில் அதிபரான பிரவீன் என்பவரிடம், ஐ போன்களை மிகவும் குறைந்த விலைக்கு வாங்கி தருவதாகக் கூறி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தாக கூறப்பட்டது. இதனால், ஏமார்ந்து பாதிக்கப்பட்ட பிரவீன், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட திலீப்பை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்,பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
விசாரணையில், அவர் மீது ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. அதாவது, ஃபேஸ்புக் மூலம் மிக அழகான பெண்களைக் குறி வைத்து, அவர்களிடம் நட்பாக அறிமுகமாகி, “விமானப் பணிப்பெண் வேலை வாங்கி தருவதாக” கூறி, ஏராளமான பெண்களிடமும் லட்சக்கணக்கில் மோசடி செய்து விட்ட புகார் தான் அது.
குறிப்பாக, சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பிரியா என்ற இளம் பெண், திலீப் மீது சென்னை ஜாம்பஜார் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், “என்னுடைய நகையை திலீப் திருடி விட்டதாக” குற்றம் சாட்டி இருந்தார். இதனால், பதிலுக்கு அந்த பெண் மீதும் திலீப், புகார் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், சிலரிடம் இது போன்று ஆசை வலைகளை விரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான விசாரணையை போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான பெண்களின் பட்டியல் மற்றும், அவரிடம் ஏமார்ந்தவர்களின் பட்டியலையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
விசாரணைக்குப் பிறகு, திலீப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே ஒரு முறை சிறைக்குச் சென்று வந்துள்ள திலீப், இம்முறை நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் கைதாகி தற்போது சிறைக்குச் சென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.