காங்கிரஸ் புதிய தலைமை! - குழப்பங்களுக்கு விடை எப்போது கிடைக்கும்?
By Madhalai Aron | Galatta | Aug 25, 2020, 02:38 pm
காங்கிரஸ் கட்சியின் தலைவராக 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராகுல் காந்தி நியமிக்கப்பட்டார். இதையடுத்து, மக்களவைத் தேர்தல் தோல்வியால் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மூத்த தலைவர்கள் வற்புறுத்தியபோதும் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி நியமனம் செய்யப்பட்டார்.
தற்போது, சோனியா காந்தியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் நிறைவுபெற்ற நிலையில், 73 வயதாகும் அவர் உடல்நலன் கருதி தீவிர அரசியலில் ஈடுபட முடியாத சூழலில் இருக்கிறார். இதனால், பாஜக அரசுக்கு எதிராகத் தொடர்ந்து ஆக்டிவாக குரல் கொடுத்து வரும் ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று (ஆகஸ்ட் 24) இணையம் வழியாகக் கூடியது. இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயாளர் கே.வேணுகோபால் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு காணொலி மூலம் கூட உள்ளது. அனைத்து நிரந்தர உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
அதில், புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் பதவியை சோனியா காந்தி ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
ஆனால், இடைக்காலத் தலைவர் பதவியை சோனியா காந்தி ராஜினாமா செய்யவில்லை என்று காங்கிரஸ் கட்சி விளக்கமளித்துள்ளது. இதுபற்றி அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா கூறுகையில், சோனியா காந்தியின் ராஜினாமா குறித்து வெளியான செய்திகள் முற்றிலும் தவறானது என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காங்கிரஸின் செல்வாக்கு 2014ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது. ஆகவே, காங்கிரஸ் தலைமையிலிருந்து அடிப்படை கட்டமைப்பு வரை மாற்றங்கள் தேவை என்பதை வலியுறுத்தி ஐந்து முன்னாள் முதல்வர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் உள்பட 23 மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
``பாஜகவின் எழுச்சியையும், இளைஞர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு தீர்க்கமாக வாக்களித்ததையும் அக்கடிதத்தில் ஒப்புக்கொண்டவர்கள், ஆதரவுதளங்கள் மற்றும் இளைஞர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காங்கிரஸ் இழப்பது தீவிரமான கவலைக்குரிய விஷயம்" எனவும் குறிப்பிட்டனர்.
`முழு நேரமும் பணியாற்றக்கூடிய துடிப்பான இளம் தலைமை வேண்டும். அவர் அனைவருக்கும் நன்கு அறிந்தவராகவும் களத்தில் ஆக்டிவாக செயல்படக்கூடியவராகவும் இருக்க வேண்டும்' என்றும், `காங்கிரஸ் செயற்குழுவில் மீண்டும் தேர்தலை நடத்துவது, கட்சியின் மறுமலர்ச்சிக்கு வழிகாட்டுவதற்கான நிறுவனம் சார்ந்த நடைமுறையை உடனடியாக உருவாக்குவது போன்ற கோரிக்கைகளும் அதில் இடம்பெற்றிருந்தன. குலாம் நபி ஆசாத், கபில் சிபல், மனீஷ் திவாரி, சசி தரூர், முகுல் வாஸ்னிக், வீரப்ப மொய்லி, பிரிதிவிராஜ சவுகான்' உள்ளிட்டோர் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
ஆரோக்கியமான ஜனநாயகம் அமைய வேண்டுமானால் தேசிய அளவில் காங்கிரஸில் மறுமலர்ச்சி ஏற்படுவது அவசியமாகிறது என்று குறிப்பிடும் அந்தக் கடிதம், சுதந்திரத்திற்குப் பின்னர் நாடு அதன் மிகப்பெரிய அரசியல், சமூக மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும்போது கட்சியின் நிலையான சரிவு எவ்வாறு வருகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா என்பது பற்றி விரைவில் தெரிந்துவிடும்.