நாடு முழுவதும் வரும் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், பொதுவாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு மக்கள் வழிபாடு நடத்துவர். பின்னர் குறிப்பிட்ட நாள்கள் கழித்து பிள்ளையார்களின் விஜர்சன ஊர்வலம் நடத்தப்படும். ஆனால் இந்த வருடம் கொரோனா தாக்கத்தினால் ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை நீக்க வேண்டுமென பாஜகவினர் தொடர்ச்சியாக கூறிவருகிறார்கள்.
இதற்கிடையில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு குறித்த பேச்சுகள், தமிழகத்தில் தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுபற்றி இன்று தமிழக அரசு முக்கியமான ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில்,
* பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும்.
* தமிழகத்தில் விநாயகர் சிலையை பொது இடங்களில் வைக்க, ஊர்வலம் செல்ல தடை தொடருகிறது.
* கொரோனாவை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
* மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாட்டுக்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
* வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டும் அரசின் ஆணையை மக்கள் பின்பற்ற அறிவுறுத்தி உள்ளது.
* மத்திய, மாநில அரசுகளின் ஆணைகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டது குறித்து, இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் முதலமைச்சரிடம் கேள்வி கேட்பட்டது. அதற்கு அவர், ``கொரோனா அச்சுறுத்தலால் மத ஊர்வலங்களை மத்திய அரசு அனுமதிக்கவில்லை; அதனை தமிழக அரசு பின்பற்றுகிறது. நீதிமன்ற உத்தரவு, மத்திய அரசு வழிகாட்டுதல்படி விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று பதில் அளித்திருக்கிறார்.
தமிழக அரசு விதித்திருந்த ஊர்வலத்துக்கான தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் சில தினங்களுக்கு முன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதை விசாரித்த மதுரை கிளை நீதிமன்றம், இன்றைய தினம், ``விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு பிறப்பித்த தடை உத்தரவும் செல்லும். கொரோனா தடுப்பு நடவடிக்கையே தமிழக அரசின் உத்தரவிற்கு காரணம். தமிழக அரசின் உத்தரவை தடை செய்ய முடியாது. சிலையை வைக்க ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள்?. இது தமிழக அரசின் கொள்கை முடிவு. எனவே இதற்கு தடை செய்ய முடியாது" என மிக உறுதியாக தெரிவித்தது.
தூத்துக்குடியை சேர்ந்த ராமசாமி என்பவர் தாக்கல் செய்திருந்த அந்த மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
இதேபோல மதுரை ஐகோர்ட்டில் ராஜபாளையம் தர்மாபுரத்தில் உள்ள மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் சிலை வைத்து வழிபட அனுமதி கோரியும், சில தினங்களுக்கு முன் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இரண்டு நாள்களுக்கு முன், இந்த வழக்கானது நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கூறுகையில், ``தமிழகத்தில் தினமும் 6 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவும் சூழல் உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்த எப்படி அனுமதிக்க முடியும்? கொரோனா தாக்கம் இல்லை என்றால் விநாயகர் சதுர்த்தி நடத்துவதில் நீதிமன்றம் ஏன் தலையிடப் போகிறது? இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம். மனுதாரர் மனுவை திரும்ப பெறாவிட்டால் அதிக அபராதம் விதித்து தள்ளுபடி செய்ய நேரிடும்" என நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.