திருப்பத்தூர் மாவட்டத்தில் காதலர்கள் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில், காதலன் கழற்றிவிட்டதால் ஏமாற்றப்பட்ட காதலி காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த திருவலம் தொப்ளா மோட்டூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் லதா, மோட்டூரில் உள்ள தனது பாட்டி வீட்டில் சிறு வயதில் இருந்தே வளர்ந்து வருகிறார். பட்டி வீட்டிலேயே தங்கிப் படித்து வந்த இளம் பெண் லதா, அதே பகுதியைச் சேர்ந்த அசோக் குமார் என்ற இளைஞருடன் தொடக்கத்தில் நட்பாகப் பழகி வந்துள்ளார்.
அவர்களுக்குள் இருந்த இந்த நட்பு நாளடைவில், காதலாக மாறி உள்ளது. இதனால், அசோக் குமார் - லதா ஜோடி, காதலர்களாக உலா வந்தனர். அத்துடன், அவர்கள் இருவரும், அந்த பகுதியில் பல்வேறு இடங்களுக்கு ஜோடியாகச் சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.
கறிப்பாக, காதலன் அசோக் குமார், திருமணம் செய்துகொள்வதாகப் பல ஆசை வார்த்தைகள் கூறி, காதலி லதா உடன் ஒரு உல்லாச வாழ்க்கையே வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இப்படி ஊர் ஊராகச் சுற்றி அந்த பகுதி முழுவதும் வலம் அந்த அவர்கள், அந்த பகுதி மக்கள் பெரும்பாலானவர்களிடம் காதல் ஜோடிகளாக அறியப்பட்டனர்.
இந்நிலையில், லதா வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன. இது தொடர்பாகத் தனது காதலன் அசோக் குமாரிடம் திருமணத்திற்குச் சம்மதம் வாங்குமாறு, காதலி லதா கூறி உள்ளார். ஆனால், “எங்கள் வீட்டில் சம்மதிக்கவில்லை என்றும், இதனால் உன்னைத் திருமணம் செய்துகொள்ள முடியாது” என்றும் கூறி, அவர் லதாவை திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும், “என் பெற்றோர்கள் நம் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்” என்றும், அசோக் குமார் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். ஆனாலும், திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க காதலி லதா எவ்வளவோ முயன்று பார்த்து உள்ளார். ஆனால், காதலன் அசோக் குமார் கொஞ்சமும் மனம் இறங்கி வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட இளம் பெண் லதா, இது குறித்து தனது உறவினர்களிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனால், அவரது உறவினர்கள் அளித்த அறிவுரையின் படி, காட்பாடி அடுத்துள்ள திருவலம் காவல் நிலையத்தில், இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம் பெண் லதா புகார் அளித்தார். காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காதலன் அசோக் குமார் தலைமறைவாகி உள்ளார்.
அத்துடன், “காதலன் அசோக் குமாரின் உறவினர் ஒருவர் சென்னையில் காவல் ஆய்வாளராக உள்ளதால், அவருடைய அழுத்தம் காரணமாக திருவலம் காவல் நிலைய அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்து வருவதாக” பாதிக்கப்பட்ட லதாவின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், “பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரைப் பெற்றுக்கொண்டு நியாயத்தை வழங்காமல், காவலர்கள் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாகவும் கூறி, அதனை கண்டிக்கும் விதமாக, இளம் பெண் லதாவின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இளம் பெண் லதாவுக்கு ஆதரவாக, அவரது உறவினர்கள் ஏராளமானோரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இளம் பெண்ணின் போராட்டத்தை அடுத்து போலீசார் சமரசம் பேச வந்துள்ளனர். அப்போது, “காதலன் அசோக் குமாரை தன்னுடன் சேர்த்து வைக்கவில்லை என்றால், நான் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வேன்” என்று கூறிக்கொண்டே லதா, தற்கொலைக்கு முயன்றார். இதனால், காவல் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார், தடுத்து நிறுத்தி திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்து, அந்த பெண்ணை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.