கொரோனா 2 வது அலை பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
By Aruvi | Galatta | May 20, 2021, 12:44 pm
இந்தியாவில் கொரோனா 2 வது அலை தொற்று பரவலைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 2 வது அலையான, மிக மோசமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால், நாள்தோறும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் பலிகடா ஆக்கி வருகிறது. கொரோனா முதல் அலையைக் காட்டிலும், இந்த 2 வது அலையில் மிக அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுவதால், பொது மக்களும் கடும் பீதியடைந்திருக்கிறார்கள்.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,76,110 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,57,72,400 ஆக உயர்ந்திருக்கிறது.
நேற்று மட்டும் கொரோனாவால் 3,874 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இதனால், நாடு முழுவதும் இது வரை கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையானது 2,87,122 ஆக அதிகரித்து இருக்கிறது.
ஒரே நாளில் நாடு முழுவதும் கொரோனாவின் இந்த கோரப்பிடியில் இருந்து 3 லட்சத்து 69 ஆயிரத்து 77 பேர், குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.
இதனால், இந்தியாவில் இது வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தோரின் மொத்த எண்ணிக்கையானது 2 கோடியே 23 லட்சத்து 55 ஆயிரத்து 440 ஆக அதிகரித்து உள்ளது.
அதே போல், ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்படி, இந்தியாவில் இதுவரை 32,23,56,187 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 20,55,010 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
முக்கியமாகத் தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியா அளவில் தமிழகம் தற்போது தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.
இந்நிலையில், கொரோனா 2 வது அலை பரவலை தடுக்கும் விதமாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு தற்போது வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசுக்கான முதன்மை அறிவியல் ஆலோசனை அமைப்பு, இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.
அதில்,
- நல்ல காற்றோட்ட வசதி கொரோனா பரவலை குறைக்கும். அதனால், அப்படியான சூழலில் நாம் இருப்பது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
- ஜன்னல் கதவுகளைத் திறந்து வைக்க வேண்டும் மற்றும் எக்ஸாஸ்ட் மின்விசிறியைப் பயன்படுத்த வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- வெளிக்காற்று வரும் வகையில் வீடு, அலுவலக அறைகளை வைத்திருக்க வேண்டும் என்றும், ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.
- வீடு, அலுவலகங்களில் காற்றோட்ட வசதி நம்மை பாதுகாக்கும் என்றும், அதற்கான சூழலை நாம் உருவாக்க வேண்டும் என்றும், கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
இப்படியாக முகக்கவசம், தனிநபர் இடைவெளி, கிருமி நாசினி உள்ளிட்ட காற்றோட்ட வசதியையும் இணைத்து, மத்திய அரசு தற்போது புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.
இதனிடையே, தமிழ்நாட்டின் கொரோனா தொற்றுக்கான பரிசோதனைக் கட்டணமானது 1200 ரூபாயில் இருந்து 900 ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.