சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றினால் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 5-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளது என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி. சரண் தந்தையின் உடல் நிலை குறித்து நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர்,
``எனது தந்தையின் உடல்நிலை நேற்று இருந்தது போலவே இருக்கிறது. அவருக்கு பொருத்தப்பட்டு இருந்த செயற்கை சுவாச கருவியான வென்டிலேட்டரை நீக்கி விட்டதாக வதந்தி பரவி உள்ளது. அது உண்மை அல்ல. செயற்கை சுவாச கருவி உதவி இல்லாமல் விரைவில் அவர் சுவாசிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அவர் தொடர்ந்து வெண்டிலேட்டரில்தான் இருக்கிறார். அப்பாவை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அனைவருடைய பிரார்த்தனைகளும் அவரை மீட்டு கொண்டு வரும் என்று நம்புகிறோம்" என்று அவர் கூறினார்.
இந்நிலையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சுவாசத்தை சீராக வைத்துக் கொள்ள தொடர்ந்து எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் ஐந்தாம் தேதியன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அப்போது, தான் நலமாக இருப்பதாகவும் தொலைபேசியில் யாரும் அழைக்க வேண்டாம் என்றும் காணொளி காட்சி மூலம் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அவரது உடல்நிலை மோசமடைந்தது. ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அதற்குப் பிறகு பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லாத நிலையில், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது.
அவர் சிகிச்சை பெற்றுவரும் தனியார் மருத்துவமனை இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, அவருக்கு 'ECMO' கருவியும் பொருத்தப்பட்டிருப்பாதவும் அவருடைய உடல்நலக் குறியீடுகள் தற்போது திருப்திதரும் வகையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் குழு அவரது உடல்நலத்தை கவனித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் அவரது உடல்நலம் கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒருவரது இதயமும் நுரையீரலும் போதுமான அளவு இயங்காதபோது ரத்தஓட்டம் தடைபடுகிறது. நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் செல்வதும் குறைகிறது. அப்படியான சூழலில் எக்மோ எந்திரத்தைப் பொருத்துவதன் மூலம் ரத்தம் உடலில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு, ஆக்ஸிஜனேற்றம் செய்யப்பட்டு மீண்டும் உடலுக்குள் அனுப்பப்படுகிறது. ரத்தத்தில் போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல் உடலின் பிற உறுப்புகள் பாதிக்கப்படுவது இதனால் தடுக்கப்படும்.
பொதுவாக, இதய - நுரையீரல் செயலிழப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு இந்த எந்திரத்தைப் பொருத்தி, உடல்நிலையை மேம்படுத்த மருத்துவர்கள் முயற்சிப்பார்கள். கோவிட் - 19 நோயின் தாக்கத்தால் போதுமான ஆக்ஸிஜன் ரத்தத்திற்குக் கிடைக்காத நிலையில், அவர்களுக்கு செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது. ஆனால், செயற்கை சுவாசமும் பலனளிக்காத நிலையில், இந்த ECMO கருவி பொருத்தப்படுகிறது.
இதற்கு முன்பாக முன்னால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ECMO கருவி பொருத்தப்பட்டபோது இந்தக் கருவியின் பயன்பாடு குறித்து பரவலாகப் பேசப்பட்டது.
இந்த நிலையில், எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நலம் பெற வேண்டுமென ஆகஸ்ட் 20ஆம் தேதி மாலை 6 மணி முதல் 6.05 வரை கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். அவரவர் இடத்திலிருந்தபடி எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பாடல்களை ஒலிக்கச்செய்வதன் மூலம் இந்தப் பிரார்த்தனையை செய்ய வேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர்.