பிரபல ரவுடி விகாஸ் துபே-வும், என்கவுண்ட்டர் தினேஷ்குமாரும்!
By Madhalai Aron | Galatta | Jul 13, 2020, 03:41 pm
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூரில், பிரபல ரவுடி விகாஸ் துபே மற்றும் அவரது குழுவினர் டி..எஸ்.பி உள்ளிட்ட 8 போலீஸாரை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 30 ஆண்டுகளில், கொலை, கொலை முயற்சி, ஆட் கடத்தல் உள்ளிட்ட 62 வழக்குகள் ரவுடி விகாஸ் துபே மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்ற வழக்குகளில் தொடர்புடைய விகாஸ் துபே, மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள போலீஸாரிடம் சிக்கினார். உ.பி. போலீஸாரிடம் ஒப்படைத்த பின்னர் தப்பிக்க முயன்ற நிலையில் போலீஸாரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1990-ல் இவர் மீது ஷிவ்லி போலீஸ் நிலையத்தில் முதல் வழக்குப் பதிவானது. ஒருவரை அடித்த குற்றத்துக்காக இந்த வழக்குப் பதிவானது. 1992-ல் இவர் மீது முதல் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஓய்வு பெற்ற பள்ளி முதல்வர் சித்தேஸ்வர் பாண்டே, கொலை வழக்கில் இவர் மீது வழக்குப் பதிவானது. இவர் உட்பட 4 பேருக்கு அந்த வழக்கில் 2004-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதில் ஒருவர் இறந்துவிட்டார். விகாஸ் துபே உள்பட்ட 3 பேர் ஜாமீனில் வெளியே இருந்தனர். ரவுடியாக இருந்த போதிலும் பல போலீஸ் அதிகாரிகள் இவருக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
இவர், 1999-ல், அவருடைய சொந்த கிராமத்திலேயே ஜுன்னா பாபா என்பவரை கொலை செய்து அவரது வீடு, நிலம், சொத்துகளை அபகரித்துக் கொண்டார். கடந்த 2000-ம் ஆண்டில் தனது ஆசிரியர், தாராசந்த் பள்ளியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முதல்வர் ஆகியோரை கொலை செய்தார். 2001-ல் உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் உள்ள ஷிவ்லி காவல் நிலையத்தின் உள்ளேயே பாஜக தலைவர் சந்தோஷ்சுக்லாவை விரட்டிச் சென்று சுட்டுக் கொன்றார். இதனால் கைது செய்யப்பட்ட அவர், 4 வருடங்களுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். 2002-ல் பஞ்சாயத்து தலைவரான லல்லன் பாஜ்பாயாவை கொலை செய்ய விகாஸ் துபே முயற்சித்தார். அதே ஆண்டில் ரூ.20ஆயிரத்துக்காக கேபிள் ஆபரேட்டர் தினேஷ் துபே என்பவரைக் கொலை செய்துள்ளார்.
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த விகாஸ் துபே, 2006-ம் ஆண்டு அரசியலுக்கும் வந்தார். 2006-ம் ஆண்டு பிக்ரு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரானார். இதைத் தொடர்ந்து மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே பிக்ரு கிராமத்துக்கு அருகிலுள்ள பீட்டி கிராமத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விகாஸ் துபேவின் சகோதரர் கிராம பஞ்சாயத்துத் தலைவராகப் போட்டியின்றி தேர்வானதற்கு காரணமாக அமைந்தார். இவரது சகோதரரின் மனைவி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இவை அனைத்தும் விகாஸ் துபேவின் செல்வாக்கால்தான்.கடந்த 30 ஆண்டுகளாக உத்தர பிரதேச மாநில போலீஸாரை ஏமாற்றி வந்துள்ளார் விகாஸ். இவர் மீது உ.பி. ரவுடிகள் சட்டம், குண்டர்கள் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவாகி உள்ளன.
கடந்த 30 ஆண்டுகளில் 62 குற்ற வழக்குகளில் தொடர்புடைய விகாஸ் துபே, தப்பிக்க முயன்ற நிலையில், சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.எஸ்.பி.) தினேஷ் குமார் தலைமையிலான போலீஸாரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த செயலுக்கு பலதரப்பினர் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், பிரபல ரவுடி விகாஸ் துபேவை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றது சேலத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி என்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும், என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி விகாஸ் துபே மரணம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளைக்கு விசாரணை நடத்தப்படுகிறது.
யார் இந்த தினேஷ் குமார்?
பிரபல ரவுடி விகாஸ் துபே-வை சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், இந்த என்கவுண்ட்டருக்கு தலைமை தாங்கிய, சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார், சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே மலையடிவாரத்தில் உள்ள லக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சின்னதண்டாவைச் சேர்ந்தவர். இவர் தந்தை பிரபு (வயது 63), விவசாயி. தாயார் சுபத்ரா (54). இவர்களின் ஒரே மகன் தான் 34 வயதான தினேஷ்குமார். இவருக்கு, ரம்யா என்ற மனைவியும், அனுஷ் கார்த்திக் என்ற மகனும் உள்ளனர். தினேஷ்குமார் தன்னுடைய பள்ளிப் படிப்பை மேட்டூரில் உள்ள செயின்ட் மேரீஸ் பள்ளியிலும், சேலம் வித்யா மந்திர், ஈங்கூர் கங்கா மெட்ரிக் பள்ளிகளிலும் முடித்தார். பின், கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. பட்டப்படிப்பு படித்து, தொடர்ந்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்றார். கான்பூர் மாவட்டத்தின் சிறப்பு போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.
பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு என அனைத்தும் விடுதியில் தங்கிப் படித்த அவருக்கு கால்நடை டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் அவரது படிப்பின் பாதை மாறி, தற்போது போலீஸ் அதிகாரியாகி விட்டார். அதிலும் அவர் சாதனை படைத்துள்ளார் என்று அவரின் உறவினரும், கொளத்தூர் ஒன்றிய முன்னாள் தலைவருமான இளங்கோ தெரிவித்துள்ளார்.