இந்திய விமானப்படையில் இணைந்த ரபேல் போர் விமானங்கள்
By Nivetha | Galatta | Sep 10, 2020, 05:25 pm
உலகின் அதிநவீன போர் விமானமான ரபேல் விமானங்களை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் தயாரித்து வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது. அதில் முதல்கட்டமாக, 5 ரபேல் போர் விமானங்கள் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. துல்லிய தாக்குதலுக்க பெயர்பெற்ற இந்த விமானங்கள், ஜூலை 27-ந் தேதி, அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்துக்கு வந்து சேர்ந்தன.
இந்நிகழ்ச்சியில் இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேசுகையில், ``எங்கள் எல்லைகளில் உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த போர்விமானம் இணைப்பு மிக முக்கியமானது. எனது சமீபத்திய வெளிநாட்டு பயணத்தில், இந்தியாவின் பார்வையை உலகத்தின் முன் வைத்தேன். எந்தவொரு சூழ்நிலையிலும் எங்கள் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை சமரசம் செய்யக்கூடாது என்ற எங்கள் தீர்மானத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தினேன். இதற்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
இந்திய விமானப்படை தனது விமானங்கள் மற்றும் தளவாடங்களை முன்கள நிலைகளில் நிறுத்திய வேகம், நமது விமானப்படை அதன் செயல்பாட்டுக் கடமைகளை நிறைவேற்ற முழுமையாக தயாராக உள்ளது என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது" என்றார்.
ரபேல் விமானங்களுக்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர், முறைப்படி ரபேல் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டன. இதற்கான ஆவணத்தை விமானப்படையின் 17 படைப்பிரிவின் 'தங்க அம்புகள்' குழு கட்டளை அதிகாரி கேப்டன் ஹர்கீரத் சிங்கிடம் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் வழங்கினார். முன்னதாக பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பிரான்ஸ் பாதுகாப்புத்துறை மந்திரிக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், பிரான்ஸ் ராணுவ மந்திரி பிளாரன்ஸ் பார்லி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா, பாதுகாப்பு செயலாளர் அஜய்குமார், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் சதீஷ்ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரபேல் விமானத்தை விமானப்படையில் இணைப்பதற்கான ஆவணத்தை வழங்கும் ராஜ்நாத்சிங்.
இதில் பிரான்ஸ் குழு சார்பில், இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இமானுவேல் லெனைன், விமானப்படை தளபதி எரிக் அடல்லட், விமானப்படை துணைத்தளபதி, ரபேல் விமானத்தை தயாரித்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தின் தலைவர் எரிக் டிரேப்பியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்திய விமானப்படையின் 17வது படைப்பிரிவில் (கோல்டன் ஆரோஸ்) ரபேல் விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் இந்திய விமானப்படை மேலும் வலிமை பெற்றுள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் வாங்கப்பட்ட 5 ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் இன்று முறைப்படி இணைக்கப்பட்டன. அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.