மரண தண்டனை போன்றது விவசாய சட்டம் : ராகுல்காந்தி கருத்து
By Nivetha | Galatta | Sep 28, 2020, 05:45 pm
விவசாய சட்டம் விவசாயிகளுக்கு மரண தண்டனை போன்றது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டமூலத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர். அத்துடன் விவசாயிகள் உள்ளிட்ட பலர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்த போதே 24 ஆண்டு கால கூட்டணி கட்சியாக இருந்த சிரோமணி அகாலிதளம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் இந்த மசோதா நிறைவேறியது. இதையடுத்து மத்திய அமைச்சராக இருந்த ஹர்சிம்ராத் கவுர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அக்கட்சியினர் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனிடையே இந்த மசோதா ராஜ்யசபாவிலும் நிறைவேறியது.
இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியது. இதையடுத்து அந்த மசோதா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அவர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கூறுகையில் விவசாயிகளின் வேதனையையும் பஞ்சாபியர்களின் அழுகுரலையும் கேட்க மறுத்து மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தது வேதனை அளிக்கிறது.
ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழி மசோதா, விவசாய மசோதா உள்ளிட்டவைகளுக்கு ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர் பஞ்சாபியை அலுவல் மொழியாக அங்கீகரிக்க மறுத்துவிட்டார். விவசாய மசோதாக்களுக்கு எதிராக தேசத்தின் ஒருமித்த கருத்தை ஏற்று குடியரசுத் தலைவர் அந்த மசோதாவை திருப்பி அனுப்புவார் என நம்பியிருந்தோம். உண்மையில் ஜனநாயகத்திற்கும் விவசாயிகளுக்கும் இது கருப்பு நாளாகும் என்றார்.
இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ``விவசாய சட்டங்கள், நமது விவசாயிகளுக்கு மரண தண்டனை போன்றது. விவசாயிகளின் குரல் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நசுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உள்ளேயும், வெளியேயும் விவசாயிகளின் குரல் நசுக்கப்பட்டுள்ளது என ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கான தூக்கு தண்டனையே எனவும் கூறினார். நாட்டில் ஜனநாயகம் அழிந்துவிட்டது என ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பக்கம், விவசாய மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இன்று கேரள காங்கிரஸ் எம்பி டிஎன் பிரதாபன் மனு தாக்கல் செய்துள்ளார். இதேபோல் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கும் தெரிவித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி பிரதாபன் இன்று விவசாய மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அரசியமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார். விவசாய மசோதாவை எதிர்த்து பஞ்சாபில் அமரிந்தர் சிங் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் நாடாளுமன்றத்தில் விவசாய மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதற்கு காங்கிரஸ், திமுக, ஷிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. இன்று தமிழகத்தில் திமுக தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. பஞ்சாப், அரியானாவிலும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. பஞ்சாபில் விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த கத்கர் காலன் கிராமத்தில் அமரிந்தர் சிங் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
முன்னதாக அமரிந்தர் அளித்து இருந்த பேட்டியில், ''விவசாயம் மாநிலம் சார்ந்தது. மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் விவசாய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மாநில நலனுக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது'' என்றார். டெல்லி இந்தியா கேட்டில் இன்று காலை டிராக்டர் தீ வைத்து எரிக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு, ''எனக்கும் டிராக்டர் இருந்தால், நானும் தீ வைத்து கொளுத்தி இருப்பேன். ஏன் அடுத்தவர்கள் பற்றி கவலைப்பட வேண்டும். மாநிலங்களுக்கு என்று சிலவற்று மத்திய அரசு விட்டு வைக்குமா என்பது சந்தேகம்தான்'' என்று தெரிவித்து இருந்தார்.
இப்படியாக காங்கிரஸ் கட்சி கடுமையாக விவசாய மசோதாக்களை எதிர்த்து வருகிறது. விவசாய மசோதா புற்றுநோய் போன்றது. சிறிது சிறிதாக விவசாயிகளை விஷம் போன்று கொன்று விடும் என்று காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. விவசாய மசோதாவை எதிர்த்து அரியானா, பஞ்சாப் மாநிலம் கடுமையாக போராட்டம் நடத்தி வருகிறது.
தமிழகத்தில், விவசாய மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இன்றைய தினம் மாநிலம் முழுவது போராட்டங்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது. திமுக முன்னெடுத்து இந்த போராட்டத்தை ஒருங்கினைத்து நடத்தியிருந்தது.