கொரோனா ஆபத்தின் பிடியில் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர்! தற்போதைய நிலை என்ன?
By Nivetha | Galatta | Aug 11, 2020, 01:40 pm
இந்தியாவில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 22 லட்சத்தைக் கடந்துள்ளது. தொடர்ந்து 5 வது நாளாக கொரோனாவில் புதிதாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 60 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.
சாமாணியர்கள் மட்டுமன்றி இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கொரோனாவின் பிடியில் இன்றைக்கு சிக்கியிருக்கிறார்கள். அந்த வரிசையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அர்ஜுன் ராம் மேக்வால், தர்மேந்திர பிரதான், விஸ்வாஸ் சாரங், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பி.ஸ்ரீராமுலு, கர்நாடக வேளாண் அமைச்சர் பி.சி.பாட்டீல், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 2012 முதல் 2017-ம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த பிரணாப் முகர்ஜிக்கும் நேற்று கொரோனா உறுதிசெய்யப்பட்டிருந்ததுது.
இதுபற்றி பிரணாப் முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், ``வேறு ஒரு விஷயமாக மருத்துவமனைக்குச் சென்றபோது நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். அதில் எனக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆதலால், கடந்த வாரத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு, நீங்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரணாப் முகர்ஜி விரைவில் குணமடைய காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள், பல்வேறு மூத்த தலைவர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்
இந்நிலையில், ஏற்கெனவே இருந்த பாதிப்பு என அவர் குறிப்பிட்டிருந்த பாதிப்பு, இப்போது தீவிரமாகி உள்ளதென தற்போது தெரியவந்துள்ளது.
மூளை ரத்த கட்டிக்கான அறுவை சிகிச்சை செய்து கொண்ட முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, செயற்கை சுவாச உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தற்போது வயது 84. முதுமை காரணமாக உடல் பலவீனமான நிலையில் இருந்து வருகிறார். இந்த நிலையில்தான், டெல்லியிலுள்ள, தனது வீட்டுக் கழிவறையில் அவர் வழுக்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது தலையில் அடிபட்டுள்ளது. இதைத் தொடர்ந்துதான், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்திருக்கிறார்.
தற்போது அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு ஐசியூ பிரிவில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். கொரானா வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருந்திருந்தால் செயற்கை சுவாசத்தின் தேவை இருந்திருக்காது என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடல் மூப்பு, அறுவை சிகிச்சை மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு போன்றவற்றின் காரணமாக பிரணாப் முகர்ஜி தீவிரமான ஓய்வில் இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று டெல்லியில் பிரணாப் முகர்ஜி சிகிச்சைபெறும் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல் நலம் பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்தார். சுமார் 20 நிமிடங்கள் ராஜ்நாத் சிங் அங்கு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குணமடைய பிரார்த்தனை தற்போதுள்ள நிலவரப்படி, பிரணாப் முகர்ஜி ஆபத்தான கட்டத்தை தாண்டவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே பிரணாப் முகர்ஜி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.