தமிழகத்தில் பொதுப்பணி, நெடுஞ்சாலை, மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவி பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 6வது ஊதிய குழுவின் போது அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் அடிப்படை தர ஊதியம் ரூ.15,600 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2013 ஜூலை 22ம் தேதி அடிப்படை தர ஊதியத்தை ரூ.9300 ஆக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதைய எதிர்த்து உச்சநீமன்றத்தில் தமிழ்நாடு பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2013ல் போடப்பட்ட அரசாணைக்கு தடை விதித்தது. இதனால், மீண்டும் பொறியாளர்களுக்கு ஒரு நபர் ஊதிய குழு நிர்ணயித்த ஊதியம் தரப்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், 7வது ஊதிய குழு ஊதிய விகிதத்தில் கடந்த 2013 அரசாணையின் போது அறிவிக்கப்பட்ட ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது உதவி பொறியாளர்களுக்கு 9300-34800+5100ம், உதவி செயற்பொறியாளர்களுக்கு 15,600-39100+5400, செயற்பொறியாளர்களுக்கு 15600-39100+6600 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், உதவி பொறியாளர்களுக்கு மட்டும் ஊதிய விகிதம் பல மடங்கு குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பணியாற்றும் பொறியாளர்களுக்கு 6-வது ஊதிய குழுவில் வழங்கப்பட்ட ஊதியத்தில் தற்போது ரூ.15 ஆயிரம் வரை குறைத்து வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இதை கண்டித்தும் ஏற்கனவே வழங்கப்பட்ட ஊதியத்தை குறைக்காமல் வழங்க கோரியும் ஊரக வளர்ச்சிதுறை பொறியாளர்கள் சங்கத்தலைவர் ராமசாமி தலைமையில் பொறியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து அலுவலகம் முன் நின்று இன்று பகலில் கோஷம் எழுப்பினார்கள். பின்னர் முழுமையான சம்பளம் வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
பொறியாளர்களுக்கான ஊதிய குறைவுக்கான அரசாணையை கண்டித்து, பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும், இதற்கு எதிராக குரல் எழுப்புகின்றனர். அந்த வகையில், மார்க்ஸிஸ் கட்சி சார்பில் ``தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து பொறியாளர்களுக்கும் அறிவித்துள்ள ஊதிய குறைப்பை ரத்து செய்க. கடந்த 18.11.2020 அன்று தமிழக அரசுத்துறைகளில் பணிபுரியும் உதவிப் பொறியாளர்களுடைய அடிப்படை ஊதியத்தை 15,600/- ரூபாயிலிருந்து 9,300/- ரூபாயாக குறைத்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கோருகிறது" எனக் கூறப்பட்டது.
மேலும், ``2010ம் ஆண்டு அரசுத் துறைகளில் பணிபுரியும் பொறியாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்தார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவர்கள், வழக்கறிஞர்களுக்கு இணையாக பொறியாளர்களுக்கும் அடிப்படை ஊதியம் ரூ. 15,600/-ஆக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது. இதர பல்வேறு அரசு ஊழியர்களுக்கு ஊதிய அதிகரிப்பு செய்து ஊதிய முரண்பாடுகளை களைவதற்கு பதிலாக 2013ல் தமிழக அரசு பொறியாளர்களின் ஊதியத்தை குறைத்தது. இதையொட்டி வழக்கு தொடுக்கப்பட்ட பின்னணியில் அதிகரிக்கப்பட்ட ஊதியமே இதுநாள் வரை தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்தது. அக்குழு 2019ல் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் தற்போது அனைத்து உதவிப் பொறியாளர்களின் ஊதியத்தை மாநில அரசு தற்போது வாங்கும் ஊதியத்தில் அடிப்படைச் சம்பளம் ரூ. 6,300/- குறைத்துள்ளது பொறியாளர்களை பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளது.
முதலாவதாக, இன்று நிலவி வருகிற பொருளாதார சூழலில் உண்மை ஊதியம் மிக கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. இரண்டாவதாக, இன்று சம்பள குறைப்பு ஏற்பட்டால் பதவி உயர்வு காலத்தில் என்ன நிலைக்கு போனாலும் இந்த இழப்பை ஈடுகட்ட முடியாது. மூன்றாவதாக, சம்பள குறைப்பு அதற்கு இசைந்த அளவில் ஓய்வுபெற்றவர்களின் ஓய்வூதியத்திலும் பிரதிபலிக்கும் ஆபத்தும் உள்ளது. எனவே, அனைத்து தரப்பு பொறியாளர்களும் ஊதிய உயர்வுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி வரும்போது, ஏற்கனவே பெற்று வருகிற ஊதியத்தை குறைப்பது என்பது சரியான அணுகுமுறை அல்ல.
தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதலமைச்சரின் பொறுப்பில் இருந்து வருகிற நிலையில் அத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை பொறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை கணக்கில் கொண்டு இந்த ஊதிய குறைப்பு அரசாணையை ரத்து செய்யும் கொள்கை முடிவை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்"
என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..
இதேபொல, ``பொறியாளர்களுக்கு ஊதியக் குறைப்பு: நீதிபதி முருகேசன் ஆணையத்தின் பரிந்துரைகளைத் தமிழக அரசு நிராகரிக்கவேண்டும்" என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் வலியுறித்தினார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,
“ஏழாவது ஊதியக் குழவின் பரிந்துரைகளை 2017 ல் தமிழக அரசு நடைமுறைபடுத்திய போது ஏற்பட்ட குறைகளையும் முரண்பாடுகளையும் களைவதற்காக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி டி. முருகேசன் தலைமையிலான ஆணையம் செய்த பரிந்துரைகளின் அடிப்படையில் பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டத் துறைகளில் பணியாற்றும் பொறியாளர்களின் அடிப்படை ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஓவ்வொருவரும் சுமார் ரூபாய் 15, 000 வரை ஊதியக் குறைப்புக்கு ஆளாக்கப்பட்டனர். இது எந்த விதத்திலும் ஏற்கத்தக்க தல்ல. எனவே, நீதிபதி முருகேசன் குழு பரிந்துரைகளைத் தமிழக அரசு நிராகரிக்க வேண்டும், எவருக்கும் ஊதியக் குறைப்போ பணிநிலைக் குறைப்போ செய்யக் கூடாது என்று வலியுறுத்திகிறோம்.
201௦ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் பொறியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூபாய். 15, 000 என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது நீதிபதி முகேசன் ஆணையத்தின் பரிந்துரைப்படி அந்த அடிப்படை ஊதியம் ரூபாய் . 9300/- எனக் குறைக்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய அநீதியாகும். 10 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை பத்தாண்டுகள் கழித்து குறைத்து நிர்ணயித்த வரலாறு எந்த மாநிலத்திலும் கிடையாது. இந்த அநீதியை தமிழக அரசு உடனடியாகக் களைய வேண்டும். நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை மட்டுமின்றி தமிழக அரசின் 20க்கும் மேற்பட்ட துறைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற பொறியாளர்கள் இதனால் ஊதியக் குறைப்புக்கு ஆளாகிக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி நில அளவைத் துறையில் பணியாற்றும் ஆய்வாளர், துணை ஆய்வாளர் பதவிகளில் இருப்பவர்களுக்கு இப்போது பணி நிலையின் தகுதி குறைக்கப்பட்டிருக்கிறது. ஊதியமும் குறைக்கப்பட்டுள்ளது. இதுவும் ஏற்கத்தக்க தல்ல. இந்தக் குளறுபுடிகளை அகற்றுவதற்கு நீதிபதி முருகேசன் குழுவின் பரிந்துரைகளைத் தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். புதிதாக ஒரு ஆணையத்தை அமைத்து இந்த ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை ஏற்கனவே இருந்த அடிப்படை ஊதியத்தைத் தொடர்வதற்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்”.
எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரியும் இதேபோல கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் இதுபற்றி கூறும்போது, ``2010 திமுக ஆட்சியில் மருத்துவர்களுக்கு இணையாக பொறியாளர்களுக்கு தொடக்கநிலை ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால், 2013-ல் அதிமுக அரசு உதவிப் பொறியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் இழப்பு ஏற்படும் வகையில் ஊதிய விகிதத்தை வழங்கியது. இதை எதிர்த்து பொறியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள், நீதிமன்றத்திலும் முறையிட்டார்கள்.
உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஒரு குழுவினை தமிழக அரசு அமைத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீதிபதி முருகேசன் குழு அறிக்கை கொடுத்தும், 2013-ல் குறைத்து வழங்கப்பட்ட ஊதியத்தையே இப்போதும் வழங்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. நீதிபதி முருகேசன் குழு அறிக்கையை பொது வெளியில் வெளியிடாமலும், குழு அளித்த பரிந்துரைகள் தொடர்பாக பொறியாளர்கள் சங்கப் பிரதிநிதிகளின் கருத்தை அறியாமலும் ஊதியத்தை குறைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. எனவே, பொறியாளர்களின் ஊதியக் குறைப்பு நடவடிக்கையை முதல்வர் பழனிசாமி உடனடியாக கைவிட வேண்டும்" என்று அவர் கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தில் அரசின் நடவடிக்கை என்னவென பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.