உன்னாவ் சிறுமிகள் கொலையில் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு “ஒருதலைக்காதலே காரணம்” என்றும், போலீசார் தெரிவித்து உள்ளனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் 3 பேர், தனது பெற்றோருடன் வசித்து வந்தனர். இவர்கள், தங்களது வீட்டில் மாடு வளர்த்து வந்தனர். அப்போது, மாட்டுக்கு வைக்கும் தீவனம் தீர்ந்து விட்டதால், மாட்டுக்கு தேவையான தீவனம் வாங்குவதற்காக, கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதியம் நேரத்தில் சகோதரிகள் 3 பேரும், அங்குள்ள கடை வீதிக்கு சென்றிருந்தனர்.

ஆனால், அந்த 3 சிறுமிகளும் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால், பதறிப்போன சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சகோதரிகள் 3 பேரையும் அந்த பகுதி முழுவதும் தேடி அலைந்து உள்ளனர். அவர்களைப் பல இடங்களில் தேடிப்பார்த்தும், அவர்கள் எங்கேயும் கிடைக்கவில்லை. 

இதனால், அவர்களுக்குச் சொந்தமான வயலில் சென்று அந்த சிறுமிகளைத் தேடிப் பார்த்து உள்ளனர். அப்போது, சிறுமிகள் 3 பேரும் தங்களது சொந்த வயலில் துப்பட்டாவால் ஒன்றாக வாயில் கட்டப்பட்ட நிலையில், சடலமாகக் கிடந்ததைக் கண்டு பெற்றோரும், அவரது உறவினர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதில், 2 சிறுமிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்து உள்ளனர். மற்றொரு சிறுமி மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில், தனது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, போராடிக்கொண்டு இருந்து உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமிகளின் உடல்களைப் பார்த்துக் 
கதறி அழுதனர்.

இது தொடர்பாக, விரைந்து வந்த போலீசார், சிறுமிகளின் உடல்களைப் பார்த்து சகோதரிகள் 3 பேரும், மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்றும், அதன் காரணமாக, 3 சிறுமிகளுக்கும் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருக்கலாம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், உயிரோடு இருக்கும் சிறுமியை மீட்ட போலீசார், உடனடியாக அவர்களை அருகில் உள்ள கான்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு, அந்த சிறுமி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சடலமாக மீட்கப்பட்ட இரு சிறுமிகளின் உடல்களும், பிரேதப் பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமிகளைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து, மிக கொடூரமான முறையில் கொலை செய்தவர்களைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து மிக தீவிரமாகத் தேடி வந்தனர்.

குறிப்பாக, உயிரிழந்த சிறுமிகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், “சிறுமிகளின் உடல்களில் எந்த காயங்களும் இல்லை என்றும், 3 சிறுமிகளும் விஷம் குடித்திருந்ததும்” தெரிய வந்தது.
 
“சிறுமிகளுக்கு விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்ததால்” போலீசார் தங்களது பாணியில் விசாரணையை இன்னும் தீவிரப்படுத்தினர். இந்த விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் படி, சிறுவன் உட்பட அந்த பகுதியைச் சேர்ந்த இருவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

இது தொடர்பாக பேசிய அந்த மாநிலத்தின் ஐஜி லஷ்மி சிங் பேசும்போது, “இது தொடர்பாக முக்கிய குற்றவாளி வினய் மற்றும் அவருக்கு உதவிய ஒரு சிறுவன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று, குறிப்பிட்டார். 

“ஊரடங்கு காலத்தில் சிறுமிகள் வயல்வெளிக்கு வரும் போது, அதே பகுதியைச் சேர்ந்த வினய் என்பவர், அவர்களுடன் பேசி பழகி வந்து உள்ளார். அதில், ஒரு பெண் மீது வினய் ஒருதலைபட்சமாகக் காதலை வளர்த்து வந்திருக்கிறார். ஆனால், அந்த பெண் அவரை காதலிக்க மறுத்துவிட்டார். 

அத்துடன், குறிப்பிட்ட அந்த பெண்ணின் தொலைபேசி எண்ணையும் அடிக்கடி கேட்டு அந்த இளைஞன் வற்புறுத்தி வந்திருக்கிறார். ஆனாலும், தனது செல்போன் எண்ணை கொடுக்க அந்த பெண் தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த வினய், அந்த சிறுமியை கொலை செய்யத் திட்டம் தீட்டி உள்ளார்.

அதன் படி, வழக்கம் போல் 3 சிறுமிகளும் வயல்வெளிக்கு வந்து உள்ளனர். அப்போது, வினய் காதலித்த சிறுமிக்கு தாகம் எடுக்கவே தண்ணீர் கேட்டிருக்கிறார். 

அப்போது, அங்கு வந்த ஒருதலைக்காதலன் வினய்,  குடிக்கும் தண்ணீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து அந்த சிறுமிக்கு கொடுத்து உள்ளார். 

அந்த சிறுமி அந்த தண்ணீரை குடித்துக்கொண்டிருக்கும் போதே மற்ற 2 சிறுமிகளும் அந்த தண்ணீரைப் பிடுங்கிக் குடித்து உள்ளனர். 

அப்போது, மற்ற 2 சிறுமிகளையும் தண்ணீர் குடிப்பதைத் தடுக்க வினாய் போராடியதாகவும், ஆனாலும் அவர்கள் அந்த தண்ணீரைக் குடித்து விட்டனர்” என்றும், வினய் தன்னுடைய வாக்குமூலத்தில் கூறியதாக” ஐஜி லஷ்மி சிங் கூறியுள்ளார்.

மேலும், “ இந்த வழக்கில், விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்றும், வினய்யின் வாக்குமூலம் தற்போது சரிபார்க்கப்பட்டு வருகிறது” என்றும், அவர் தெரிவித்தார். இதனால், இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.