டிஜிட்டல் பட்டா நடைமுறையை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி!
By Nivetha | Galatta | Oct 09, 2020, 04:01 pm
நாட்டில் முதல் முறையாக, ஒரு லட்சத்து, 32 ஆயிரம் பேருக்கு, 'டிஜிட்டல்' பட்டாக்களை, வரும், 11ல், பிரதமர் நரேந்திர மோடி வழங்குகிறார். ஊரகப்பகுதிகளில் நிலப்பட்டா இல்லாமல் வசிப்போருக்கு பட்டா வழங்கும் திட்டத்தை, பிரதமர் மோடி, கடந்த ஏப்ரலில் தொடங்கி வைத்தார். இதையடுத்து, நிலமற்றவர்கள் வாழும் பகுதிகளை, ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் படம் எடுத்து, அவர்களுக்கு, டிஜிட்டல் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, ஹரியானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில், மொத்தம், 763 கிராமங்களில் வசிக்கும், ஒரு லட்சத்து, 32 ஆயிரம் பேருக்கு டிஜிட்டல் பட்டா வழங்கப்பட உள்ளது.'ஆதார்' அட்டை வடிவில் உள்ள இந்த டிஜிட்டல் பட்டாக்களை, பிரதமர் மோடி, வரும், 11ம் தேதி வழங்குகிறார்.
கூடுதல் செய்தியாக, இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைவராக தன்னுடைய இருபதாவது ஆண்டில் பிரதமர் மோடி அடியெடுத்துவைக்கிறார் என்ற மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர் பாஜகவினர். கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 13 ஆண்டுகள் அவர் குஜராத் முதல்வராகப் பதவிவகித்தார். பின்னர், 2014 முதல் தற்போது வரை பிரதமர் பதவியில் இருக்கிறார்.
பொதுவாழ்க்கையில் அரசு நிர்வாகத்தின் தலைவராகத் தொடர்ந்து இருபது வருடங்களை அவர் நிறைவு செய்திருக்கிறார். இது குறித்துக் கருத்து தெரிவித்திருக்கும் பிரதமர் மோடி, ``தேசத்தின் நலனும், ஏழைகளின் நலனுமே எனக்கு முக்கியம் என்று நாட்டு மக்களுக்கு மீண்டும் உறுதியளிக்க விரும்புகிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தியில் இது குறித்து தொடர்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த மோடி, ``மக்களின் ஆசீர்வாதத்துக்கும் அன்புக்கும் தகுதியுள்ளவனாக மாற்றிக்கொள்ள தொடர்ந்து பாடுபடுவேன். எந்தவொரு நபருமே தனக்கு எந்தக் குறைபாடுமே இல்லை என்று கூற முடியாது. இது போன்ற முக்கியமான மற்றும் பொறுப்பான பதவிகளை நீண்டகாலம் வகிக்கும் நானும், ஒரு மனிதனாக சில தவறுகளைச் செய்திருக்கலாம். இவற்றையெல்லாம் தாண்டி என்மீதான உங்கள் அன்பு சீராக வளர்ந்திருப்பது எனது அதிர்ஷ்டம்'' என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
மேலும், ``இன்று நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்கள் எனக்கு ஆசீர்வாதங்களையும், அன்பையும் காட்டியவிதம், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் எனது வார்த்தைகளின் சக்தி குறைந்துவருகிறது. உங்கள் ஆசீர்வாதங்களும் அன்பும் நாட்டுக்கு சேவை செய்யவும் , ஏழைகளின் நலன் மற்றும் இந்தியாவைப் புதிய உயரத்துக்குக் கொண்டு செல்வதற்கான எங்கள் தீர்மானத்தை பலப்படுத்தும்'' என்றும் பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
கடந்த மாதம் 70-வது பிறந்தநாளைக் கொண்டாடிய பிரதமர் மோடி, தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் 20 ஆண்டுகளைக் கடந்ததை பா.ஜ.க நிர்வாகிகள், அமைச்சர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.
தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தன்னார்வலராக இணைந்த மோடி, பின்னர் பா.ஜ.க-வில் பல ஆண்டுகள் பணியாற்றினார். கட்சித் தலைமை அவரை 2001-ல் சொந்த மாநிலமான குஜராத்துக்கு அனுப்பியது. அங்கு தேர்தலில் போட்டியிட்டு அம்மாநில முதல்வரான மோடி அதன் பின்னர், தான் போட்டியிட்ட எந்தத் தேர்தலிலும் தோல்வியைச் சந்திக்கவில்லை. 2001-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று அதன் பிறகு தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் குஜராத் முதல்வராகப் பதவிவகித்தார். அவரது ஆட்சிக்காலத்தில், குஜராத்தில் பா.ஜ.க-வை மிகப்பெரிய நிலைக்குக் கொண்டு சென்றார். பின்னர், 2014-ல் தேசிய அரசியலில் காலடி எடுத்துவைத்த மோடி, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதன்முறையாக, பிரதமராகப் பதவியேற்றார். அதன் பின்னர் 2019 பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.