“நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு?” மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை..
By Aruvi | Galatta | May 05, 2021, 04:03 pm
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி, இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ள நிலையில், “இந்தியாவில் மீண்டும் ஊரடங்கா?” என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனாவின் 2 வது அலையானது மிக வேகமாகப் பரவிக்கொண்டு இருக்கிறது. இதனால், நாள் தோறும் கொரோனா தொற்றும் அதன் ஏற்பாடுகள் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த முடியாமல், மத்திய அரசு கடுமையாகத் திணறி வருகிறது.
இப்படியாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2 கோடியே 6 லட்சத்து 65 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.
அத்துடன், நாடு முழுவதும் 34.87 லட்சம் பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மிக முக்கியமாக இந்தியாவில் கொரோனாவுக்கு இது வரை 2,26,188 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.
இப்படியாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது மிக வேகமாகத் தொடர்ந்து பரவி வருவதால், மருத்துவ நிபுணர்கள் பலரும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல் படுத்த வேண்டும்” என்று, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கருத்தையே, அமெரிக்க மருத்துவ நிபுணர்களும், உலக சுகாதார நிறுவனமும் இந்தியாவை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டு வருகின்றன.
இது தொடர்பாகத் தொற்றுநோய் சிகிச்சை நிபுணரான அமெரிக்க அதிபரின் ஆலோசகர் டாக்டர் பாசி, இந்தியாவில் தற்போது நிலவும் சூழல் குறித்து கருத்து கூறும்போது, “இந்தியாவில் தற்போது நிலைமை மிக மோசமாக உள்ளது என்றும், மருத்துவமனையில் படுக்கை வசதிகள் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றுக்கு மிக கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது” என்றும், கவலைத் தெரிவித்தார்.
“இதனால், இந்திய மக்கள் மனதில் அச்சம் எழுந்து உள்ளது என்றும், இந்த நேரத்தில் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை அமெரிக்காவைப் போல மற்ற நாடுகளும் செய்ய வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், “இந்தியாவுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை வேகப்படுத்த வேண்டும், இன்னும் விரிவுபடுத்த வேண்டும்” என்றும், அவர் குறிப்பிட்டார்.
“மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளுக்கும் இந்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், இதற்கான பலன் உடனடியாக கிடைக்கா விட்டாலும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை எதிர்காலத்தில் இந்தியாவில் தடுக்க முடியும்” என்றும், அவர் கூறினார்.
குறிப்பாக, “உடனடி நிவாரணமாக, தன்னிடம் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் இந்தியா உடனே பயன்படுத்த வேண்டும் என்றும், தற்காலிக மருத்துவமனை வசதிகளை ஏற்படுத்த ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டும்” என்றும், அவர் கேட்டுக்கொண்டார்.
அதே போல், “இந்தியாவில் மேலும் சில வாரங்களுக்கு முழு முடக்கத்தை அறிவிக்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தினார்.
அதே போல், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும், முழு ஊரடங்கின் அவசியம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், கொரோனாவின் 2 அலை தொடங்கிய போது, “அத்தியாவசிய தேவை ஏற்பட்டால் மட்டுமே மாநிலங்கள் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும்” என்று, பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி, இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அப்படி, இந்தியா முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தினால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அரசு தரப்பு தயங்குவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
எனினும், நாட்டில் தொடர்ந்து அதிகரித்துக் காணப்படும் கொரோனா பரவலுக்கு முழு ஊரடங்கை அறிவிப்பதைத் தவிர, வேறு எந்த வழியும் மத்திய அரசிடம் இல்லை என்றும், விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.