``இந்த 10 மாநிலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தினால், தேசமே நோயிலிருந்து மீளும்!" - பிரதமர் பேச்சு
By Nivetha | Galatta | Aug 11, 2020, 04:22 pm
கொரோனா பரவல் அதிகம் உள்ள மாநிலங்களான மகாராஷ்ட்ரா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், டில்லி, உத்திர பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா, குஜராத், பீகார் ஆகியவற்றின் மாநில முதல்வர்களுடன், இன்று (ஆகஸ்ட் 11) காலை பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு பணிகளில் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
அப்போது பிரதமர் மோடி, “எந்தெந்த மாநிலங்களில் கொரோனாவுக்கான பரிசோதனைகள் குறைவாக உள்ளதோ அங்குதான் கொரோனா பாசிட்டிவ் அதிகமாகிறது என்று பொருள். ஆகவே அனைத்து இடங்களிலும் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். குறிப்பாக பிஹார், குஜராத், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தெலங்கானா மாநிலங்களில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். இந்த மாநிலங்களில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டியுள்ளது.
இன்றைய தேதியில் 80% கொரோனா தொற்றுக்கள் இந்த மாநிலங்களில்தான் உள்ளன. எனவே கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்த மாநிலத்தின் பங்கு மிக முக்கியமானது. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 6 லட்சத்திற்கும் அதிகம், இந்த 10 மாநிலங்களில்தான் அதிக தொற்றுக்கள் உள்ளன.
எனவே இந்த 10 மாநிலங்கள் ஒருங்கிணைந்து பேசி, ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய தேவை உள்ளது. ஒவ்வொருவரின் அனுபவங்களிலிருந்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. இந்த 10 மாநிலங்களில் கொரோனாவை வென்று விட்டால், இந்தியா கொரோனாவை வெல்லும்
இறப்பு குறைந்து, குணமடைவோர் அதிகரிப்பது கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சரியான திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறோம். சுகாதார பணியாளர்கள், ஒவ்வொரு நாளும் புதிய சவால்களை எதிர்கொள்கின்றனர். கொரோனா பரவல் நேரம் ஒடிக்கொண்டிருக்கிறது. புதிய சூழலும் உருவாகிறது.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மாநிலங்களின் பங்கு இன்றியமையாதது. ஒவ்வொரு மாநிலமும் போராடி வருகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகம் பாதித்த மாநிலங்கள், பேசும் போது, தடுப்பு பணிகள் வலுவடையும். நம்பிக்கை அதிகரித்து அச்சம் குறைகிறது. பாதிப்பு குறைவது நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
மக்களும் இப்போது விழிப்புணர்வு பெற்று ஒத்துழைப்பு அளிக்கின்றனர். இது நம் விழிப்புணர்வு முயற்சிகளின் பலன்களாகும். அதனால்தான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் திட்டம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது.
கொரோனா தொற்றை 72 மணி நேரத்தில் நாம் கண்டுபிடித்து விட்டால் தொற்று அதன் தீவிரத்தை இழப்பதை நாம் காண முடிகிறது என்று நிபுணர்களும் இப்போது கூறுகின்றனர். மாநிலமாக இருந்தாலும் மத்தியாக இருந்தாலும் நாம் ஒன்றிணைந்து ஒரு அணியாகச் செயல்படும்போது, குழு உணர்வுடன் பணியாற்றும் போது நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கிறது” என்று கூறியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் மாநில முதல்வர்கள் யோகி ஆதித்யநாத், எடப்பாடி பழனிசாமி, மம்தா, அமரீந்தர் சிங், சந்திரசேகரா ராவ், உத்தவ் தாக்கரே, விஜய் ரூபானி, நிதிஷ் குமார், ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த சில வாரங்களாக 55,000க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகி வந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை சரிந்துள்ளது. புதிதாக 871 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53,601 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 22, 68,676 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 15,83,490 பேர் குணமடைந்துள்ளதாகவும், 6,39,929 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை 45, 257 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமானோர் விகிதம் 69.80 விழுக்காடாகவும், சிகிச்சையில் உள்ளோரின் விகிதம் 28.21 விழுக்காடாகவும், இந்தியாவில் இறப்பு விகிதம் 2 விழுக்காடுக்கு கீழ் சென்றுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இறப்பு விகிதம் 1.99 விழுக்காடாக உள்ளது.