“சசிகலாவிற்கு எதிராகவா? திமுகவிற்கு எதிராகவா?” பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் - இபிஎஸ் சந்திப்பு! ஏன்?
டெல்லியில் பிரதமர் மோடியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்துப் பேசி உள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் இன்று சந்தித்துப் பேச உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. இதனால், திமுகவிற்கு எதிராக அதிமுக போராட்டத்தையும் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார்.
அவரைத் தொடர்ந்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு 9.30 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
அதிமுகவில் தற்போது இரு பெரும் தலைவர்களாக இருக்கும் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும், ஒரே நாளில் டெல்லிக்கு தனித்தனியாக விமானத்தில் சென்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தான், இன்று காலை 11 மணிக்கு மேல் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை ஒ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சந்தித்துப் பேசினார்கள்.
இந்த சந்திப்பின் போது அதிமுகவின் முக்கிய தலைவர்களான தம்பிதுரை, எஸ்.பி.வேலுமணி மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம், ரவீந்திரநாத் எம்.பி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அரசியல் தொடர்பான சந்திப்பாக இருக்கும் என்றே கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
அதாவது, தமிழக அரசியல் சூழல், அதிமுக உட்கட்சி விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியுடன், ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்றும், கூறப்படுகிறது.
அதே நேரம், சமீபத்தில் அதிமுக தொண்டர்களிடம் சசிகலா பேசும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அதில் “நான் மீண்டும் அரசியலுக்கு வந்துவிடுவேன்” என்று தொடர்ந்து பேசி வருகிறார் சசிகலா.
இது தொடர்பாக, சசிகலாக தொலைக்காட்சிகளிலும் பேட்டி அளித்து அதிமுக தொண்டர்களை தன் பக்கம் இழுத்து வரும் வேலையை செய்வதாக அதிமுகவின் முக்கிய புள்ளிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக, இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே ஒற்றுமை இல்லை என்றும் வெளிப்படையாகச் சொல்லும் சசிகலா, “செயற்குழு, பொதுக்குழுவில் தொண்டர்கள் முடிவின் படி என்னை பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது என்றும், இரட்டை தலைமையைத் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை” என்றும், மிக கடுமையாகவே சசிகலா விமர்சனம் செய்திருந்தார்.
இப்படியாக, தொடர்ந்து வெளியாகும் சசிகலா ஆடியோ விவகாரம், அதிமுக உட்கட்சித் தேர்தல், கட்சி பொதுக் குழு கூட்டம், ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு, கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி முயற்சித்து வருவதாகக் கூறப்படுவது உள்ளிட்ட பிரச்சினைகள், மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் அளிக்கப்படாதது போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்கே ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் தனித் தனியாக டெல்லி சென்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பிரதமர் மோடியை சந்தித்துப் பேசி உள்ள ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும், தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சந்திப்பு, இன்று மாலை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதனால், அதிமுகவிலும், தமிழக அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.