ராமர் கோவில் கட்டுமானத்திற்கு கற்கள் கிடைக்கவில்லை!
By Aruvi | Galatta | Nov 20, 2020, 07:27 pm
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி மற்றும் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை மத்திய அரசு மூன்று மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்டுவதற்காக உத்தரப் பிரதேச அரசு சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 1850களில் தொடங்கிய சட்ட போராட்டத்தின் வெற்றி பெற்று , ராமர் பிறந்த மண் என சொல்லபடும் அயோத்தியில் கோவில் கட்டும் பணி தொடங்கியது.
இதையடுத்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிர்த்யா கோபால் தாஸின் செய்தித்தொடர்பாளர் மகந்த் கமல் நயன் தாஸ் சொன்னப்படி , ’பழமையான குபேர திலக கோயிலில் இருக்கும் சிவன் ஆலயத்தில் சிவனுக்கு முதல் பூஜை நடத்தப்பட்டு , ஆகஸ்ட் மாதம் அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பதற்கான பூமி பூஜை மோடி தலைமையில் நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கால் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்ட பணிகள் நிறுத்தப்பட்டு மீண்டும் ராமர் கோயில் கட்டுமானத்துக்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளது. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், ராமர் கோவில் கட்டுமான பணிக்காக, பாஹர்புர் மணல் கற்களை கொண்டு பாதி வேலைப்பாடுகளை முடித்துள்ளனர். மேலும் கற்கள் தேவைப்படுவதாகவும் ஆனால் மேற்கொண்டு அந்த கற்களை எடுத்து வர முடியாத நிலை நிலவுவதாகவும் சொல்கிறார்கள்.
காரணம், கோவில் கட்டுமானத்திற்கு பிங்க் நிற மணல் கற்கள் தேவைப்படுகிறது. இந்த பிங்க் நிற மணல் கற்கள் அரியவை என்பதால் தட்டுபாடு உண்டாகியிருக்கிறது. இந்த அரிய வகை பன்சி பாஹர்புர் என்கிற பிங்க் நிற மணல் கற்கள் ராஜஸ்தானில் இருக்கும் சுரங்கத்தில் கிடைக்கின்றன. அருகில் வனவிலங்கு சரணாயலம் உள்ளதால் இந்த சுரங்கங்களுக்கு 2016ல் தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டுவிட்டது.
இப்போது ராஜஸ்தானில் காஸ்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அதனால், ‘’ ராமர் கோவில் கட்டுமானம் என்பது ஒரு தேசியப் பணி. இதை ராஜஸ்தான் அரசு புரிந்து கொண்டு அனைத்து தடைகளுக்கு தளர்வு தந்து மணல் கல் சுரங்கங்களை மீண்டும் திறக்க, ஆளும் காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்க என நம்புகிறோம்” என விஸ்வ இந்து பரிஷத்தின் செய்தி தொடர்பாளர் சரத் சர்மா தெரிவித்திருக்கிறார்.
- கே. அபிநயா