தேனிலவை ஒத்திவைத்துவிட்டு கடற்கரையைச் சுத்தம் செய்த புதுமண தம்பதி!
By Aruvi | Galatta | Dec 08, 2020, 07:16 pm
ஆசை ஆசையாகத் தேனிலவு கொண்டாட வந்த புதுமண தம்பதியினர் தேனிலவை ஒத்திவைத்து விட்டு, கடற்கரையைச் சுத்தம் செய்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீப காலமாக, இந்தியாவில் புதுமண தம்பதியினர் பொது மக்களை அதிகம் ஈர்த்து, ஏதோ ஒரு வகையில் அதிகம் கவனம் பெறுகிறார்கள். அப்படி, உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் தற்போது, கவனம் பெற்று உள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் சோமேஸ்வரா பகுதியைச் சேர்ந்த அனுதீப் ஹெக்டே, அந்த மாநிலத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
அதே நேரத்தில், இந்த இளைஞர், அந்த பகுதியில் செயல்பட்டு வரும் மருந்து நிறுவனத்தில் பணிபுரியும் மினுஷா காஞ்சனை கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு, எல்லா தம்பதிகள் போலவும், இந்த தம்பதியினரும் ஆசை ஆசையாகத் தேனிலவு கனவில் இருந்துள்ளனர்.
ஆனால், அவர்கள் தங்களுக்குள் பேசி இருவரும் அந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்குச் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்து, முன் வந்தனர்.
அதன்படி, ஆசை ஆசையாக கொண்டாடவேண்டிய தங்களது தேனிலவை அப்படியே ஒத்திவைத்துவிட்டு, அங்குள்ள சோமேஸ்வரா கடற்கரையைச் சுத்தம் செய்யும் பணியில் அந்த இளம் ஜோடி ஈடுபட்டனர்.
அப்போது, சோமேஸ்வரா கடற்கரையில் குவிந்து கிடந்த குப்பைகளை அவர்கள் சுத்தம் செய்தனர்.
குறிப்பாக, அந்த சோமேஷ்வரா கடற்கரையில் கடந்த 7 நாள்களாக அவர் சுத்தம் செய்து, சுமார் 700 கிலோவிற்கும் அதிகமான கழிவுகள், 500 கிலோ நெகிழிக் குப்பைகளையும் அவர்கள் சுத்தம் செய்து அகற்றினர்.
இந்த பகுதியில் அதிகப்படியான கழிவுகள் உள்ளதால், நாள் தோறும் 2 மணி நேரம் சுத்தம் செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.
இந்த புதுமண தம்பதியின் முயற்சியைப் பார்த்து வியந்த உள்ளூர் வாசிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கூடவே கை கோர்க்கத் தானாக முன் வந்துள்ளனர்.
தற்போது, அந்த சோமேஸ்வரா கடற்கரையில் நூற்றுக்கணக்கானவர்கள் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாகப் பேசிய சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட புதுமணப் பெண் மினுஷா காஞ்சன், “நம் நாட்டில் சமூகப் பணிகளை ஆரம்பிப்பதில் பலருக்கும் தயக்கம் உள்ளது. அதே சமயம், ஒருவர் தொடங்கி வைத்தால் அதை ஆதரிக்க நிச்சயம் ஏராளமானோர் முன் வருவார்கள். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இந்தத் தொடக்கத்தை வரும் நாள்களில் தன்னிரபாவி, கபு, மால்பே, மரவந்தே உள்ளிட்ட கடற்கரைகளிலும் சுத்தம் செய்யும் பணியைச் செய்திட முடிவு செய்துள்ளனர்” என்று, கூறினார்.
இதனையடுத்து, ஆசை ஆசையாக கொண்டாட வேண்டிய தேனிலவு கொண்டாட்டத்தை ஒத்திவைத்து விட்டு, புதுமண தம்பதியினர் கடற்கரையைச் சுத்தம் செய்த நிகழ்வுக்குப் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த செய்தி, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
இதனிடையே, சென்னையில் குப்பைகளை அகற்றுவதில் விதிமீறல்கள் இருந்தால், தொடர்புடைய அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. குப்பைகளை அகற்றுவதில் விதிமீறல்கள் இருந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.