“டைட்டானிக்” ஸ்டைலில் போட்டோ ஷுட்.. புதுமண தம்பதி ஆற்றில் தவறி விழுந்து பலி!
By Aruvi | Galatta | Nov 11, 2020, 07:58 pm
“டைட்டானிக்” ஸ்டைலில் போட்டோ ஷுட் எடுக்க முயன்ற புதுமண தம்பதியினர் திடீரென ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது நவீன காலம். அதான், திருமணப் பந்தத்தில் இணையும் புதுமண தம்பதிகள், “போட்டோ சூட்” நடத்த அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்.
முன்பெல்லாம் திருமணத்தின் போது மட்டுமே போட்டோக்கள் எடுப்பது வாடிக்கையாக இருந்தது. அதன் பிறகு, காலம் கொஞ்சம் மாறிய பிறகு, திருமணத்திற்குப் பிறகு, அடுத்த சில நாட்களில் “போட்டோ ஷுட்” நடத்த ஒரு சில நாட்கள் ஒதுக்குவார்கள்.
ஆனால், இது நவீன காலம் என்பதால், திருமணத்திற்கு முன்பாகவே புகைப்படம், வீடியோக்களை சினிமா பாணியில் எடுத்து புதுமண தம்பதிகள் மகிழத் தொடங்கி இருக்கிறார்கள். அப்படி, திருமணத்திற்கு முன்பே புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க சென்ற ஒரு மணமகனும் - மணமகளும் காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது நவீன கால ஆபத்துக்கள் என்பதற்கு சாட்சியாக அமைந்திருக்கிறது.
மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா கியாத்தமாரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான சந்துரு, அந்த பகுதியில் கட்டிட இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதான சசிகலா என்ற இளம் பெண்ணுக்கும், இரு வீட்டு பெரியோர்களாலும் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. அதன்படி, இவர்களது திருமணம் வரும் 22 ஆம் தேதி நடைபெற இருந்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், திருமணத்திற்கு முன்பாகவே மணமக்கள் சந்துருவும் - சசிகலாவும், புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்கத் திட்ட மிட்டனர்.
இதையொட்டி, நேற்று அவர்கள் தங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களுடன் அங்குள்ள முடுகுதோரே பகுதியில் உள்ள மல்லிகார்ஜுனா கோயிலுக்கு சென்று புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து மகிழ்ந்தனர். அதன் பிறகு, அந்த புதுமண ஜோடிகள், அங்கிருந்து காவிரி, கபினி மற்றும் சப்திகா ஆகிய 3 ஆறுகள் ஒன்றாக சங்கமிக்கும் திருமகூடலு பகுதிக்குச் சென்று கொண்டிருந்தனர்.
அந்த இடத்தைப் பார்த்த மணப்பெண் சசிகலா, “அங்கு போட்டோ சூட் நடத்தலாம்” என்று கூறி உள்ளார். அதற்கு, மணமகன் சந்துருவும் சம்மதித்தார். அதன் பிறகு, அவர்கள் அங்கு ஒரு படகில் ஆற்றில் சென்று “டைட்டானிக்” பட ஸ்டைலில் “கப்பலின் முன்புறம் கதாநாயகனும், கதாநாயகியும் கைகளை விரித்து ஒன்றாக நின்றபடி இருப்பது போன்று” புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுக்க முயன்றனர்.
ஆனால், அங்கு படகு இல்லாத நிலையில், அங்கிருந்த பரிசலில் செல்ல அவர்கள் முடிவு செய்தனர். அதன் படியே, பரிசலில் இளம் ஜோடிகளான சந்துரு - சசிகலா, சந்துருவின் நண்பர்கள் மற்றும் புகைப்பட கலைஞர் ஒருவரும் அதில் பயணித்தனர்.
அப்போது, அந்த பரிசல் ஆற்றின் நடுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது, மணப்பெண் சசிகலாவும், மணமகன் சந்துருவும் டைட்டானிக் பட பாணியில் நின்று புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்தனர். அந்த நேரம் பார்த்து, ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், சசிகலா நிலை தடுமாறி அடுத்த நொடியே ஆற்றுக்குள் தவறி விழுந்தார். இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த மணமகன் சந்துரு, ஆற்றில் குதித்து சசிகலாவை காப்பாற்ற முயன்றார்.
ஆனால், காப்பாற்ற முயன்ற மாப்பிள்ளைக்கும் நீச்சல் தெரியாததால், இருவரும் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக, அந்த பரிசலும் ஆற்றில் அப்படியே கவிழ்ந்தது. இதையடுத்து, பரிசல்காரரும், சந்துருவின் நண்பரும் சசிகலாவையும், சந்துருவையும் காப்பாற்ற முயன்றனர்.
ஆனால், ஆற்றில் தண்ணீர் சுழன்றடித்து வந்ததால், அவர்களால் அப்போது யாரையும் காப்பாற்ற முடியவில்லை. இதனை, கரையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த சந்துரு - சசிகலாவின் குடும்பத்தினர் சத்தம் போட்டு உதவி கேட்டு கூச்சலிட்டனர். அதைப்பார்த்த அப்பகுதி மீனவர்கள் ஓடி வந்து, ஆற்றில் குதித்து சந்துருவின் நண்பனை மீட்டனர். இதனையடுத்து, பரிசல் காரரும் காப்பாற்றப்பட்டார். ஆனால், மணமக்கள் சசிகலாவும் - சந்துருவும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து, அங்குள்ள தலக்காடு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார், அப்பகுதி மீனவர்களின் உதவியுடன் சந்துரு - சசிகலாவின் உடல்களை மீட்டனர். அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே, புதுமண ஜோடி “டைட்டானிக்” ஸ்டைலில் போட்டோ ஷுட் எடுக்க முயன்றபோது திடீரென ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.