2016ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த 39 வயதான சதீஷ் என்ற நபர், 12 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இதனால் சிறுமியின் குடும்பத்தினர், குழந்தைகள் பாலியல் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதற்காக குற்றவாளி சதிஷ்க்கு, குழந்தைகள் பாலியல் குற்றத்தடுப்பு சட்டத்தின் 7-வது மற்றும் 8-வது பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது, நாக்பூர் கீழமை நீதிமன்றம். 


இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளி சதீஷின் தரப்பினர், மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி புஸ்பா கனடிவாலா அளித்த தீர்ப்பு, நாடெங்கும் பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தீர்ப்பு அனைத்துப் பெண்களை கேலிக்கு உள்ளாக்குகிறது போல் உள்ளது என அனைத்து தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


அந்த நீதிபதி கொடுத்த தீர்ப்பு, ‘’இந்த வழக்கில் சிறுமி உட்பட மற்ற அனைவரின் வாக்குமூலத்திலும் எந்த விதமான முரண்பாடுகளும் இல்லை. ஆனால் இது குழந்தைகள் பாலியல் குற்றத் தடுப்புச் சட்டத்தின் 7-வது பிரிவின் கீழ் குற்றமாக வராது. காரணம், சட்டப்பிரிவு 7-ன் கீழ் சிறுவர்களின் தோல் மீது தோல்பட்டு செய்யப்படும் தாக்குதல் தான் குற்றம்.

அணிந்திருக்கும் ஆடைக்கு மேல் பிறப்புறுப்பு, மார்பகம் போன்றவற்றைக் கையால் தொட்டு துன்புறுத்துவது பாலியல் வன்கொடுமை கிடையாது.” என்று தீர்ப்பில் அந்த நீதிபதி தெரிவித்து இருக்கிறார். சிறுமிக்கு நடந்த சம்பவத்தை பாலியல் தாக்குதலாக தான் கருத வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் வாதிட்டும் அதை, அந்த நீதிபதி ஏற்கவில்லை. 

மேலும் போக்ஸோ சட்டத்தின் 8-வது பிரிவிலிருந்து குற்றவாளியை விடுவித்து, சிறுமியை மானபங்கப்படுத்தியதாக 354-வது சட்டப்பிரிவின் கீழ் ஒரு வருடம் சிறைத் தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.


குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் சூழலில், இந்த தீர்ப்பானது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலர் தீர்ப்பை எதிர்த்து வருகின்றார்கள். பாலியல் ரீதியான குற்றங்களை வெளியில் சொல்ல தயங்கும் சமூகத்தில், ஒரு சிலர் மட்டுமே தைரியத்துடன் நீதிமன்றம் வரை செல்கிறார்கள். அவ்வாறு நம் சமூகம் இருக்கையில், இதுபோன்ற தீர்ப்புகள் நாளை சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.