தமிழக எம்.பி.க்களுக்கு இந்தியில் பதிலளிப்பதா? எம்.பி. சு.வெங்கடேசன் கேள்விக்கு, ஸ்டாலின் ஆதரவு
By Nivetha | Galatta | Nov 20, 2020, 06:14 pm
நவம்பர் 9 ம் தேதியன்று, சி.ஆர்.பி.எஃப் துணை மருத்துவப் பணி நியமனங்களுக்கான தேர்வு மையங்களை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய்க்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அவருக்கு நேற்றைய தினம், இணை அமைச்சர் நித்யானந்த் ராயிடமிருந்து கடிதமொன்று கிடைத்திருக்கிறது. அது முழுக்க முழுக்க இந்தியில் இருந்ததால், ``இந்தி பேசாத மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவல் மொழியான ஆங்கிலத்தில் பதில் அளிக்க வேண்டும் என்கிற அரசாணையை உங்கள் அலுவலக ஊழியர்கள் மீறி இந்தியில் பதில் அளித்துள்ளனர். அது அரசாணையையும் மீறுவது ஆகும். சரிசெய்ய வேண்டும்" என மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் நேற்று பதில் கடிதம் எழுதினார்.
இதுகுறித்து நேற்று (நவம்பர் 19) அவர் எழுதிய கடிதத்தில்,
``உங்களின் நவ.9ஆம் தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். அக்கடிதம் இந்தி மொழியில் இருந்ததால் அதன் உள்ளடக்கம் குறித்து என்னால் அறிய இயலவில்லை. இந்தி மொழியில் பதில் தந்ததன் மூலம், சட்டம் மற்றும் நடைமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.
நான் தங்களுக்கு நவ.9 அன்று சிஆர்பிஎஃப் துணை மருத்துவப் பணி நியமனங்களுக்கான தேர்வு மையங்களை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்க வேண்டுமென்று கோரி கடிதம் எழுதியிருந்தேன். தற்போது வந்துள்ள பதில் அக்கோரிக்கை குறித்ததாகவே இருக்கக் கூடுமென்று அனுமானிக்கிறேன்.
1963-ல் தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் அலுவல் மொழியாக இந்தி திணிக்கப்படாது என அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு உறுதியளித்தது தாங்கள் அறிந்ததே. இப்பிரச்சினை மீது எழுந்த நாடு தழுவிய விவாதத்தில் பிறந்த கருத்தொற்றுமையின் விளைபொருளே நேரு உறுதிமொழி.
பின்னர் 1965-ல் தமிழகத்தில் நடந்தேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பின்புலத்தில் அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியாலும் இதே உறுதிமொழி திரும்பவும் வழங்கப்பட்டது. 1967-ல் அலுவல் மொழிச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் மூலம் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் இது உறுதி செய்யப்பட்டது.
எனவே, இந்தியில் பதில் தருவதான உங்கள் அமைச்சரவையின் நடவடிக்கை சட்ட விதிகளை அப்பட்டமாக மீறுவது ஆகும். நான் உங்கள் கவனத்திற்கு - மத்திய அரசு பணியாளர், பொதுமக்கள் முறையீடுகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் அலுவல் நிர்வாகப் பிரிவு (DOPT - அலுவலக சேவைப் பிரிவு) வெளியிட்ட "அரசு நிர்வாகத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்/ சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குமான அலுவல் தொடர்புகள் - முறையான நடைமுறைகளைக் கடைப்பிடித்தல்" என்ற தலைப்பிலான எஃப்/எண் 11013/4/2018 - அலுவலக சேவை/ ஏ /III / பிப்.10 தேதியிட்டது - அரசாணையைக் கொண்டு வர விழைகிறேன்.
இந்த அரசாணையின் இரண்டாவது பத்தி இதே பொருள் குறித்து இதற்கு முன்பாக அக்டோபர் 2012, நவம்பர் 2014, பிப்ரவரி 2018, அக்டோபர் 2018-ல் பல்வேறு தேதிகளில் வெளியிடப்பட்ட அரசாணைகளைக் குறிப்பிடுகிறது. மூன்றாவது பத்தி, மேற்கூறிய அரசாணைகள் கடைப்பிடிக்கப்படாமை குறித்து அத்துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட மீறல்கள் பற்றிப் பேசுகிறது. எதிர்காலத்தில் முறையான அமலாக்கத்தை உறுதி செய்ய மூல அரசாணையையும் அது இணைப்பாகத் தந்துள்ளது.
அந்த டிச.01/ 2011 தேதியிட்ட மூல அரசாணை எண் 11013/4/2011 - அலுவல் சேவை (ஏ)- பிரிவு 5 (எக்ஸ்)ன் வரிகள் இவை. "எப்பொதெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து ஆங்கிலத்தில் கடிதம் வரப்பெற்று அதற்கான பதிலை அலுவல் மொழிச் சட்டம் 1963 ன் அடிப்படையில், அதன் விதிகளின்படி, இந்தியில் தர வேண்டியிருந்தால், இந்தி பேசாத மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில், அதன் ஆங்கில மொழியாக்க வடிவமும் சேர்த்து அனுப்பப்பட வேண்டும்".
அலுவல் மொழிச் சட்டத்தில் குறிப்பான விதிவிலக்கைப் பெற்றுள்ள தமிழகத்திற்கு இதன் இந்தி மொழிப் பயன்பாடு குறித்த அம்சம் பொருந்தாவிட்டாலும் இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்திற்குமே நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து ஆங்கிலக் கடிதம் வரப்பெறும் பட்சத்தில் ஆங்கில மொழியாக்க வடிவம் அனுப்பப்பட வேண்டுமென்ற கட்டாயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே உங்கள் அமைச்சகம் ஆங்கில மொழியாக்கம் இல்லாமல் இந்தி பேசாத மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியில் பதில் அளிப்பது இந்த அண்மைய அரசாணையையும் மீறுவது ஆகும். இந்த அரசாணையே தொடர் மீறல்களைச் சரிசெய்ய வெளியிடப்பட்டதே எனும்போது அதுவும் மீறப்படுகிறது.
முந்தைய பிரதமர்களால் வழங்கப்பட்ட உயர்வான உறுதிமொழிகள் இன்றைய ஆட்சியாளர்களாலும் மதிக்கப்பட வேண்டுமென்பது எனது ஆழமான உணர்வு. இருப்பினும் அரசாங்கமே சட்டங்களையும் நடைமுறைகளையும் திரும்பத் திரும்ப மீறுவது மனதை வருத்துவதாகும். ஆகவே, தமிழ்நாட்டிற்கு மொழிப் பிரச்சினையில் தரப்பட்ட தனித்துவமான உறுதிமொழியை மதித்து அதன் சட்ட ரீதியான அம்சங்களை அமலாக்குமாறு வேண்டுகிறேன்.
இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" என்கிற பன்மைத்துவப் பண்பைப் பாதுகாக்கிற மேன்மையான வரலாற்றுப் பெருமிதம் உள்ள நாடாகும். அத்தகைய பார்வை அரசாங்கத்தின் ஒவ்வொரு நகர்விலும் வெளிப்பட வேண்டும். இதுவே நாட்டின் ஒற்றுமையை, கூட்டாட்சி முறைமையை வலுப்படுத்துவதாய் அமையும்.
ஆகவே உங்கள் அமைச்சக அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களைத் தந்து தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடிதங்களுக்கு, ஏற்கெனவே நடைமுறையில் இருந்தும் வந்தது போன்றே, ஆங்கிலத்திலேயே பதில் தருவதை உறுதி செய்யுமாறு வேண்டுகிறேன்”.
என்று கூறியிருந்தார்.
மத்திய அமைச்சர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ``தமிழக எம்.பி.க்களுக்கு இந்தியில் பதில் கடிதம் எழுதுவது மத்திய அரசின் மொழிவெறிப் போக்கு" என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 20) கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது முகநூல் பக்கத்தில்,
``தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசிடம் ஏதேனும் விவரங்கள் கேட்டு ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்களுக்கு, மத்திய உள்துறை உள்ளிட்ட பல அமைச்சகங்களும் தொடர்ந்து இந்தி மொழியில் பதில் கடிதம் எழுதுவது என்பது, இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழிச் சட்டத்தையும், அது தொடர்பான அரசாணைகளையும், அப்பட்டமாக மீறி அவமதிப்பு செய்கின்ற மொழியாதிக்க – மொழிவெறி உணர்வையே வெளிப்படுத்துகிறது.
தி.மு.க. உறுப்பினர் வில்சன், மார்க்சிஸ்ட் உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் தொடர்புடைய துறைகளின் அமைச்சர்களுக்கு இதுகுறித்துக் கண்டனத்தைப் பதிவு செய்த பிறகே, ஆங்கிலத்தில் பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாட்டை பாழ்படுத்திடும் வகையில், சிறிய சந்து பொந்து கிடைத்தாலும் இந்தியைத் திணிப்பதில் பிடிவாதமாக ஈடுபட்டுவரும் மத்திய அரசின் மொழிவெறிப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன். அலுவல் மொழிச் சட்டத்தையும், அதில் தமிழகத்திற்குத் தரப்பட்டுள்ள தனிப்பட்ட உரிமையையும், இனியேனும் மத்திய அரசு மதித்து, அதன்வழி நடக்க வேண்டும்"
என்று பதிவிட்டுள்ளார்.