டிஜிட்டல் கணக்குகள் மீதான பாதுகாப்பின்மை அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை 15 -ம் தேதியன்று, உலக தலைவர்கள் பலரின் டிஜிட்டல் கணக்குகள் முடக்கப்பட்டிருந்தன. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன், உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி நட்சத்திரம் கிம் கர்தாஷியன், கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் ராப்பர் கன்யே, பிரபலங்களான கன்யே வெஸ்ட் மற்றும் அவரது மனைவி கிம் கர்தாஷியன் வெஸ்ட் உள்ளிட்ட உலகின் முக்கிய புள்ளிகள் பலரின் ட்விட்டர் கணக்குகளை மோசடி கும்பல் திடீரென ஹேக் செய்து முடக்கியிருந்தது. இதேபோல் ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களின் கணக்குகளையும் ஹேக் செய்திருக்கிறார்கள் ஹேக்கர்கள்.
 
இதைத்தொடர்ந்து உலக அளவில் ஹேக் என்பது இணையசெயல்பாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே மாறியது. குறிப்பாக அரசியல் தலைவர்களின்  தனிப்பட்ட இணையத்தில் கூட ஹேக்கர் ஊடுருவிவிடுயிருப்பது, பொது மக்களிடம் மாபெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கை, ஹேக்கர்கள் நேற்றைய தினம் முடக்கியுள்ளனர். ஏற்கெனவே கடந்த ஜூலை மாதம், அமெரிக்க அதிபரின் நம்பிக்கைக்குரிய ஜோ பிடன், டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஒரே நேரத்தில் கணினி வழி பிட்காயின் எனப்படும் பணம் தொடர்பான மோசடி கும்பலால் ஹேக் செய்யப்பட்டன. 

இந்நிலையில், தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட வலைத்தளத்தின் narendramodi_in என்ற ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். பிரதமரின் ட்விட்டர் கணக்கும் இப்படியான பண மோசடி கும்பலால்தான் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. பிரதமரின் இந்த ட்விட்டர் கணக்கை 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

கணக்கை முடக்கியுள்ள ஹேக்கர்கள், பிரதமரின் கொரோனாவுக்கான தேசிய நிவாரண நிதி திட்டத்திற்கு பிட்காயின் மூலம் பணம் அனுப்புமாறு தெரிவித்துள்ளனர். இதனை உறுதிப்படுத்தியுள்ள ட்விட்டர் நிறுவனம், "இந்த செயல்பாடை கண்டு, வெரிஃபைடு பக்கங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நிலைமையை நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். வெரிஃபைடு பக்கங்களை தவிர, கூடுதல் கணக்குகள் பாதிக்கப்படுவது குறித்து எங்களுக்குத் தெரியாது" என்று ட்விட்டரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. 

இருப்பினும், இந்த சம்பவம் குறித்து பிரதமர் அலுவலகம் அல்லது பிரதமர் மோடியின் தனிப்பட்ட கணக்கை நிர்வகிப்பவர்கள் யாரும் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

இந்திய அரசியலை பொறுத்தவரை, கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டியின் தனிப்பட்ட வலைத்தளம் சுய உரிமை கோரும் பாகிஸ்தான் ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்டு ஹேக் செய்யப்பட்டது.  சுதந்திர தினத்தன்று அவரது தனிப்பட்ட வலைத்தளம் ஹேக் செய்யப்பட்டது மற்றும் ஹேக்கர்கள் பாகிஸ்தானின் காஷ்மீர் தொடர்பான செய்திகளை வெளியிட்டனர், மேலும் இந்திய அரசையும் எச்சரித்தனர். இந்த சம்பவத்தை ஹைதராபாத்தில் உள்ள ஜி கிஷன் ரெட்டியின் அலுவலகம் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளது. 

அதனைத் தொடர்ந்து தற்போது பிரதமர் மோடியின் தனிப்பட்ட வலைத்தளத்தின் ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.