'விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு உறுதி செய்யும்' - மோடி உறுதி
By Nivetha | Galatta | Oct 17, 2020, 03:35 pm
விவசாயப் பயிர்களைக் குறைந்தபட்ச ஆதார விலையில் வாங்குதல் அறிவியல் முறையில் தொடரும் வகையில் மண்டி உள்கட்டமைப்பை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி நேற்றைய தினம் தெரிவித்தார். உணவு மற்றும் விவசாய அமைப்பின் 75-வது ஆண்டுவிழாவையொட்டி 75 ரூபாய் நினைவு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டார்.
இதனைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ''குறைந்தபட்ச ஆதார விலையில் விவசாயப் பயிர்களை கொள்முதல் செய்வது உணவுப் பாதுகாப்பின் முக்கிய அம்சம். மேலும், குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வது சிறந்த வசதிகளுடன் விஞ்ஞான வழியில் தொடர்ந்து செயல்படுவது அவசியம்'' என்று தெரிவித்தார்.
இதன்மூலம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் வகையில் விவசாயப் பயிர்கள் கொள்முதல் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் உணவுப் பாதுகாப்பில் இது மிகவும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
''வேளாண்மை உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுக்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் கடந்த ஆறு ஆண்டுகளாக அரசு சார்பில் முதலீடு செய்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறது'' என்று பிரதமர் கூறினார்.
மோடியை தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநிலம் சார்பில் விவசாயிகளின் நலம் மற்றும் விவசயத்துறையின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இதனை அவர் தெரிவித்துள்ளார். இந்தியா - சர்வதேச உணவு மற்றும் விவசாய வாரத்தை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடக்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், ''கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில், இடையூறு இல்லாமல் பயிர்கொள்முதல் செய்வதை அரசு உறுதிசெய்யும் என்று கூறினார். உத்தரப்பிரதேசத்தில் கரோனா முன்னெச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி 100 சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன.
ஊரடங்கில் கோதுமைப் பயிர் அறுவடைக்கு தயாராக உள்ளதால், 6000 கோதுமை கொள்முதல் நிலையங்கள் கரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலம் 36 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாய விளைப்பொருள்களுக்காக அடுத்த நான்கு ஆண்டுகளில் 5000 கிடங்குகளைக் கட்ட உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது'' என்றும் அவர் கூறினார்.
முன்னதாக விவசாயிகள் கொண்டுவரும் நெல் முழுவதையும் கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுக்கிறார்கள் என்பதில் உண்மை இல்லை என்றுச் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.