70 நாட்களாக போராடி புண்ணாகிய உள்ளங்கால்களுக்கு சிறிய ஆறுதல்.. சிங்கு எல்லையில் மசாஜ் மையம்!
By Abinaya | Galatta | Feb 10, 2021, 12:27 pm
டெல்லியில் விவசாய போராட்டம் 70 நாட்களை கடந்த நிலையிலும், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக இல்லை. விவசாயிகளும், தங்களின் கோரிக்கை நிறைவேறாமல் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை என்று உறுதியாக அறிவித்துவிட்டார்கள்.
போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் பெரும்பாலனவர்கள் 50 வயதை கடந்தவர்கள் தான் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் வயதானோர்களுக்கு முழங்கால் வலி, முதுகு வலி, கால்களில் புண் ஏற்பட்டு அவதியிலிருந்து வருகிறார்கள். இந்த அவதியுடன் தான் 70 நாட்களுக்கு மேலாக குளிரில் போராடி வருகிறார்கள்.
விவசாயிகளின் இந்த கடும் சிரமத்தைப் புரிந்துக்கொண்ட ஹர்பிரீத் சிங் என்றவர், சிங்கு எல்லையில் மசாஜ் மையம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த மையத்தில், வீட்டில் தயாரித்த வலிநிவாரணி எண்ணெய் மூலம் விவசாயிகளின் கால்களுக்கு மசாஜ் செய்யப்படுகிறது. மேலும் காலை நேரத்தில் விவசாயிகள் குளிப்பதற்கு வெந்நீர் வைத்து தரப்படுகிறது. இலவசமாக இந்த சேவையை செய்கிறார் ஹர்பிரீத் சிங்.
காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மசாஜ் மையம் திறந்து இருக்கும் என்றும், போராடும் விவசாயிகளுக்கு சின்ன புத்துணர்வு கொடுக்க என்னால் முடிந்த சிறிய உதவியை செய்கிறேன் என்கிறார் ஹர்பிரீத் சிங். குளிரிலும் , வெயிலிலும் வாடும் விவசாயிகளுக்கு இந்த சேவை சின்ன ஆறுதலாக இருக்கிறது என்கிறார்கள்.