ரூ.1 லட்சம் கடனுக்கு 9 லட்ச ரூபாய் வட்டி கேட்ட போலீஸ்.. ஐஜி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற த
By Aruvi | Galatta | Jul 14, 2020, 03:56 pm
ஒரு லட்சம் ரூபாய் கடனுக்கு 9 லட்ச ரூபாய் வட்டி கேட்ட போலீஸ் அதிகாரியின் சட்ட விரோத நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட தம்பதியினர் ஐஜி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி திருக்கனூர் செட்டிப்பட்டை பகுதியைச் சேர்ந்த வாசு தேவன், அந்த பகுதியில் உள்ள கூட்டுறவு பால் சங்கத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரமிளா, தனக்குச் சொந்தமான நிலத்தில் மாடுகள் வளர்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். வாசு தேவனும், அந்த பகுதியைச் சேர்ந்த காவல் துறையில் பணியாற்றும் வீர முத்துவும் நீண்ட கால நண்பர்கள் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, வாசு தேவன் போலீசார் வீர முத்துவிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கடனாக வாங்கி உள்ளார். இது போக, வீர முத்து நடத்தும், மாதாந்திர சீட்டில் அவரது நண்பர் வாசு தேவன் மாதம் மாதம் பணம் கட்டி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் நட்பை மறந்த போலீஸ் வீர முத்துவிற்கு, பணத்தின் மீது அதிக அளவில் ஆசை வந்துள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, வாசு தேவன் தன்னிடம் வாங்கிய ஒரு லட்சம் ரூபாய் பணத்திற்கு வட்டி மற்றும் சீட்டுப் பணம் என 2 ஆண்டுகளில் 9 லட்சம் ரூபாயாக மாறி உள்ளதாகக் கூறி உள்ளார். அத்துடன், அந்த பணத்தை உடனே திருப்பி தர வேண்டும் என்றும், வீர முத்து தன் நண்பன் வாசு தேவனை நிர்ப்பந்தித்துள்ளார்.
இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த வாசு தேவன் மற்றும் அவரது மனைவி பிரமிளா, இருவரும் சேர்ந்து, ஒரு லட்சம் ரூபாய்க்கான வட்டி பணம் எப்படி 9 லட்சமாக மாறியது என்று கணக்கு கேட்டு உள்ளனர்.
ஆனால், கணக்கு சரியாகச் சொல்லாமல், தான் போலீஸ் என்பதால் வீரமுத்து, வாசு தேவனை மிகக் கடுமையாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், கந்து வட்டியில் தான் மாட்டிக்கொண்டதை உணர்ந்த வாசு தேவன் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், விழிப்பிதிங்கி திகைத்துப் போய் நின்றுள்ளார்.
மேலும், பணத்திற்குப் பதிலாக, வாசு தேவனினுக்கு சொந்தமான நிலத்தை தனக்கு அடைமானமாகத் தருமாறு போலீஸ் வீர முத்து கேட்டிருக்கிறார். இதனால், கடும் நெருக்கடி மற்றும் மிரட்டலுக்கு ஆளான வாசு தேவன், தனக்கு சொந்தமான நிலத்தை வீர முத்துவிற்கு அடைமானமாக எழுதித் தந்து உள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அந்த இடத்தை வீர முத்து, கதிரேசன் என்ற மற்றொரு போலீஸ்காரருக்கு விற்றது தெரிய வந்தது.
இதனால், கோபப்பட்ட வாசு தேவன் மற்றும் அவரது மனைவி பிரமிளா இருவரும், இது குறித்து வீர முத்துவிடம் கேட்ட போது, கதிரேசன் என்பவர், வாசு தேவனையும் அவரது மனைவி பிரமிளாவையும் அடித்து மிரட்டியதாகத் தெரிகிறது.
இதனால், பயந்துபோன வாசு தேவன் - பிரமிளா தம்பதியினர், இது தொடர்பாக திருக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், போலீசார் அந்த புகாரை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான வாசு தேவன் மற்றும் அவரது மனைவி பிரமிளா ஆகிய இருவரும், இன்று காலை புதுச்சேரி ஐஜி அலுலவகத்திற்கு வந்தனர். ஐஜி அலுலவகத்திற்கு வந்ததும், தான் கையோடு கொண்டு வந்திருந்த மண்ணெண்ணை பாட்டிலைத் திறந்து, தங்கள் உடலில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்குக் காவலுக்கு நின்றிருந்த போலீசார், அதனைத் தடுத்து தம்பதிகள் இருவரையும் ஐஜி சுரேந்தர் சிங் யாதவிடம் அழைத்துச் சென்றனர்.
இதனையடுத்து, ஐஜி சுரேந்தர் சிங் யாதவிடம் பாதிக்கப்பட்ட தம்பதிகள் தங்களை மிரட்டும் போலீசார் மீது புகார் அளித்தனர். இதனால், ஐஜி சுரேந்தர் சிங் யாதவ், காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதனை தொடர்பு கொண்டு, இந்த புகார் குறித்து உடனே உரிய நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டார்.
இதனையடுத்து, தம்பதியினரை போலீசார் காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதனிடம் தங்களை மிரட்டும் போலீசார் மீது புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட அவர், இது குறித்து உரிய விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து, தம்பதிகள் இருவரும் நிம்மதியாக வீடு திரும்பினர்.
இதனிடையே, ஒரு லட்சம் ரூபாய் கடனுக்கு 9 லட்ச ரூபாய் வட்டி கேட்ட போலீஸ் அதிகாரியின் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம், புதுச்சேரியில் வைரலாகி வருகிறது.